/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்! மழை பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்
/
அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்! மழை பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்
அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்! மழை பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்
அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்! மழை பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்
UPDATED : ஜன 10, 2024 06:21 PM
ADDED : ஜன 09, 2024 07:26 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 10,000 ஏக்கர் நெற்பயிர்களும், 2000 ஏக்கர் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக் காலமான, கடந்த அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரை, மிதமான மழை பெய்தது.
டிசம்பர் மாதம், காற்றழுத்த தாழ்வுநிலை, 'மிக்ஜாம்' புயல் காரணமாக, கனமழை பெய்தது. பின், மழை ஓய்ந்து, பனிப்பொழிவு ஏற்பட்டது. வானிலை மாற்றத்தால், தற்போது மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது.
கடந்த 6ம் தேதி மிதமாக துவங்கிய மழை, நேற்று முன்தினம் மாலை 3:00 மணி முதல், மாவட்டம் முழுதும் பரவலாக பெய்தது.
நேற்று காலை 6:00 மணி வரை, அதிகபட்சமாக, மாமல்லபுரத்தில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும், செய்யூரில் 9.8 செ.மீ., மதுராந்தகத்தில் 9.7 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 8.6 செ.மீ., கேளம்பாக்கத்தில் 7.6 செ.மீ., செங்கல்பட்டில் 7.1 செ.மீ., திருப்போரூரில் 5.8 செ.மீ., தாம்பரத்தில் 1 செ.மீ., என, மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் சராசரியாக 7.7 செ.மீ., மழை பெய்துள்ளது. நேற்றும் கனமழை நீடித்தது. மாமல்லபுரத்தில், கனமழையால் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகினர். மீனவர்களின் இயல்பு வாழக்கை முடங்கியது.
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் தாலுகாவில், பாப்பட்லா உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராகி வந்தனர்.
நெற்கதிர் முற்றியிருந்த நிலையில், இரண்டு நாட்களாக பெய்த மழையால், பல நுாறு ஏக்கர் வயல்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன. பயிர் மூழ்கி, கொஞ்சம் கொஞ்சமாக அழுகி வருவதாக, இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருப்போரூர்
ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் - -தண்டலம் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சிறுபாலம் குறுகியதாக இருப்பதால், மழைக் காலத்தில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது.
நேற்று பெய்த மழையால், மழைநீர் விரைவாக வெளியேறாமல், சாலை முழுதும் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்தனர்.
எனவே, மேற்கண்ட பகுதியில், பெரிய அளவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர்
செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில், பல ஊராட்சிகளில், முறையான கால்வாய் வசதி இல்லை.
குறிப்பாக, சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வில்லிப்பாக்கம் காலனி பகுதி, சின்னகளக்காடி, பெருக்கரணை, சித்தாமூர் ஊராட்சி, வால்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
செய்யூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், 20,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரும் 7,000 ஏக்கர் பரப்பளவில் மணிலாவும் பயிரிடப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் புதிதாக பயிரிடப்பட்ட மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மதுராந்தகம்
அச்சிறுபாக்கம், ஒரத்தி, ராமாபுரம், களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த, 700 ஏக்கருக்கும் மேற்பட்ட பி.பி.டி., மற்றும் பொன்னி ரக நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
மதுராந்தகம் ஒன்றியத்தில், சிலாவட்டம், பாக்கம், வில்வராயநல்லுார், சாத்தமை, படாளம், நெல்லி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 10 தினங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில், 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில், வேளாண் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அசோக்,
வேளாண் இணை இயக்குனர்,
செங்கல்பட்டு மாவட்டம்.
- நமது நிருபர் குழு -