sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காஞ்சிபுரத்தில் தேங்கி கிடக்கும் ரூ.110 கோடி!பட்டு சேலைகள்

/

காஞ்சிபுரத்தில் தேங்கி கிடக்கும் ரூ.110 கோடி!பட்டு சேலைகள்

காஞ்சிபுரத்தில் தேங்கி கிடக்கும் ரூ.110 கோடி!பட்டு சேலைகள்

காஞ்சிபுரத்தில் தேங்கி கிடக்கும் ரூ.110 கோடி!பட்டு சேலைகள்

1


ADDED : மே 10, 2024 01:39 AM

Google News

ADDED : மே 10, 2024 01:39 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததால், 110 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக, கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பட்டு சேலைகளை 65 சதவீத தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் உள்ளதால், கோ- - ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு சேலைகளை அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நாட்டின் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் காஞ்சிபுரத்தில், இந்த விற்பனையை நம்பி பல ஆயிரம் குடும்பத்தினர், பட்டு சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், 36,000 பேர் உறுப்பினராக இருந்தாலும், 4,100 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதேபோல, தனியாரிடம் 4,000 நெசவாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

பட்டு மூலப் பொருட்களுக்கு சாயமிடுதல், நெசவு உபகரணங்கள் விற்பனை செய்வது என, பட்டு சேலை தொடர்பான பிற தொழில்களை நம்பி, பல ஆயிரம் பேர் உள்ளனர்.

காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 10,000 ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

தற்போது, பட்டு சேலை விற்பனையில் தொடர்ந்து ஏற்படும் மந்தம் காரணமாக, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறுகின்றன.

இதனால், நெசவாளர்களுக்கு பணி வழங்க முடியாத நிலைக்கு, கூட்டுறவு சங்கங்கள் தள்ளப்பட்டு உள்ளன.

குறிப்பாக காஞ்சிபுரத்தில், பட்டு சேலை விற்பனை குறைந்து உள்ளதால், மூன்று சேலைகளை ஒரு மாதத்தில் நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறை தான் பணி வழங்கப்படுவதாக, நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உற்பத்தி அதிகமானால், நெசவாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டி வருவதால், உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதற்கு கூட்டுறவு சங்கங்களின் தரப்பில், பட்டு மூலப்பொருட்களான பட்டு, ஜரிகை போன்றவை விலை உயர்வும், விற்பனை சரிவும் காரணமாக கூறப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக ஆண்டுதோறும் 90 - 100 கோடி ரூபாய் வரை பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், அண்ணா பட்டு கைத்தறி சங்கத்தில் மட்டும், 50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடக்கிறது.

உற்பத்தி செய்த ஒராண்டிற்குள்ளாகவே பெரும்பாலான பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளை கடந்த பட்டு சேலைகள், 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. .

தற்போது, ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும், ஆயிரக்கணக்கான பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளதால், அவற்றை தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால், பட்டு சேலை உற்பத்தியாளர்கள், கைத்தறி சங்கத்தினர் பெருமளவில் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் இயக்குனர், தலைவர், துணைத் தலைவர் பதவி இடங்கள், ஆறு மாதங்களுக்கு முன் காலாவதியானதால், அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கைத்தறி சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் விற்பனையை அதிகரிக்க புதிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாக, சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, பட்டு சேலைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால், விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக விற்பனை குறைந்து, கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000த்துக்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் தேக்கமடைந்து உள்ளன.

காஞ்சிபுரத்தில், 22 கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், நான்கு சங்கங்கள் இயங்காததால், 18 சங்கங்கள் மட்டுமே இயங்குகின்றன.

இதில், பெரிய கைத்தறி சங்கங்களில் மட்டுமே, 70 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் கையிருப்பில் உள்ளன.

இவற்றை, அரசு நிறுவனமான கோ- -- ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்து, கிளைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், குறைவான சேலைகளையே கோ- - ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்கிறது. கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் கொள்முதல் செய்த நிலையில், அதன்பின் கொள்முதல் செய்யவில்லை.

மேலும், பட்டு சேலை எனக் கூறி, போலி பட்டு சேலை விற்பனை செய்யும் கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் இதுபோன்ற கடைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சாலைகளிடம் பேச்சு

கைத்தறித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பட்டு சேலைகள் விற்பனை செய்ய, ஆண்டுதோறும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பட்டு சேலை கண்காட்சி அடிக்கடி நடத்தி விற்பனை செய்கிறோம். பண்டிகை நாட்களில், சென்னை உள்ளிட்ட பிற இடங்களிலும் கண்காட்சி நடத்தி, விற்பனையை அதிகப்படுத்தி வருகிறோம்.குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஊழியர்களுக்கு பரிசுபொருள் வழங்கும் போது, கைகளால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கைத்தறி பொருட்களை வாங்கி வழங்கும்படி, தொழிற்சாலைகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.கோ- - ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் பட்டு சேலைகளை கொள்முதல் செய்து வருகிறது. கடந்தாண்டு கூட, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகளை, காஞ்சிபுரம் கைத்தறி சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us