/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிட்வா' புயலால் நீரில் மூழ்கிய 1,250 ஏக்கர் நெற்பயிர் கடும் பாதிப்பு செங்கை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
/
டிட்வா' புயலால் நீரில் மூழ்கிய 1,250 ஏக்கர் நெற்பயிர் கடும் பாதிப்பு செங்கை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
டிட்வா' புயலால் நீரில் மூழ்கிய 1,250 ஏக்கர் நெற்பயிர் கடும் பாதிப்பு செங்கை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
டிட்வா' புயலால் நீரில் மூழ்கிய 1,250 ஏக்கர் நெற்பயிர் கடும் பாதிப்பு செங்கை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
UPDATED : டிச 04, 2025 02:35 AM
ADDED : டிச 04, 2025 02:24 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயலால் பெய்த கனமழை காரணமாக, 1,250 ஏக்கர் நெற்பயிர், நீரில் மூழ்கியுள்ளது. மேலும் நுாற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், 'டிட்வா' புயல் மற்றும் வங்க கடலில் சென்னை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்பின், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை கன மழை பெய்தது.
இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வரும் நிலையில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நீரில் மூழ்கிய நெற்பயிர் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப் போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், சம்பா பருவத்திற்கு 31,000 ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் மழையில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாக்களில், 1,250 ஏக்கர் நெற்பயிர்கள், நீரில் மூழ்கியுள்ளன.
மூழ்கிய சாலைகள் தேசிய நெடுஞ் சாலையில் பரனுார், கூடுவாஞ்சேரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மற்றும் வண்டலுார் - கேளம் பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை ஆகியவற்றில் உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாராததால், சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
வீடுகளில் புகுந்த வெள்ளம் வன்னியநல்லுார், ஊரப்பாக்கம் ஐந்தாவது தெரு ஆகிய பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நீலமங்கலம், திருத்தேரி, படூர், கன்னிவாக்கம் ஆகிய பகுதிகளில், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் இருளர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில், ஊரக வளர்ச்சித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்படாததால், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
கால்வாய் ஆக்கிரமிப்பு திருப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வரும் மழைநீர், கால்வாய் வழியாக அங்குள்ள குளத்திற்குச் செல்கிறது.
இவ்வழியாக செல்லும் கால்வாயை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தற்போது, இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

