/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போந்துார் ஊராட்சியில் 1,600 மரக்கன்றுகள் நடவு
/
போந்துார் ஊராட்சியில் 1,600 மரக்கன்றுகள் நடவு
ADDED : நவ 10, 2024 01:36 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த போந்தூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மழைநீர் கால்வாய் சீரமைத்தல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், போந்துார் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மேயக்கால் புறம்போக்கு நிலத்தில், 35 மீட்டர் நீளம், 35 மீட்டர் அகலம், 5 அடி ஆழம் கொண்ட இரண்டு பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு, மண் அரிப்பைத் தடுக்க பண்ணைக் குட்டைகளின் கரைகளில், 1500 பனை விதைகள் நடப்பட்டுள்ளன.
மேலும் பூவரசன், புங்கன், பலா, இலுப்பை, நாவல் உள்ளிட்ட 10 வகையான 1,600 மரக்கன்றுகள், வனத்துறையிடம் இருந்து பெறப்பட்டு, கிராமவாசிகள் வாயிலாக, 2 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.