ADDED : டிச 17, 2024 09:37 PM
தாம்பரம்:கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு, நெல்லிக்குப்பத்தில் ஜூப்ளி அடுக்குமாடி குடியிருப்பில் தாம்பரம் போலீசார் சோதனை செய்தினர்.
அங்கு தங்கியிருந்த, நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த மூர்த்தி, 34, தஞ்சாவூர், திருவிடைமருதுார் ராஜசேகர், 29, ஆகியோர், மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதில், ராஜசேகர், 'கிரிண்டர்' செயலி வாயிலாக நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். அதில் பழக்கமான மூர்த்தி, மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை பயன்படுத்தி வந்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து போதைப்பொருளை வாங்கி, இருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர். தவிர, வெள்ளை நிற மெத் ஆம்பெட்டமைன் ஒரு கிராம் 7,000 ரூபாய்க்கும், மஞ்சள் நிற மெத் ஆம்பெட்டமைன் ஒரு கிராம் 8,000 ரூபாய்க்கும் விற்று வந்துள்ளனர்.
இருவரையும், நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 2.87 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.