/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவமழையை நம்பி 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள்... காத்திருப்பு! செங்கை, காஞ்சியில் 621 ஏரிகளில் நீர் இருப்பு சரிவு
/
பருவமழையை நம்பி 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள்... காத்திருப்பு! செங்கை, காஞ்சியில் 621 ஏரிகளில் நீர் இருப்பு சரிவு
பருவமழையை நம்பி 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள்... காத்திருப்பு! செங்கை, காஞ்சியில் 621 ஏரிகளில் நீர் இருப்பு சரிவு
பருவமழையை நம்பி 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள்... காத்திருப்பு! செங்கை, காஞ்சியில் 621 ஏரிகளில் நீர் இருப்பு சரிவு
ADDED : அக் 08, 2024 01:31 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஏரி பாசனத்தை நம்பி, 2.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், 909 ஏரிகளில் 621ல் 50 சதவீதம் கூட தண்ணீர் இருப்பு இல்லாததால், இம்மாதம் பெய்ய உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து, இரு மாவட்ட விவசாயிகளும் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களிலும் சேர்த்து, 909 ஏரிகள் இருப்பதால், விவசாயிகளுக்கு ஏரிகளின் முக்கியத்துவம் ஆண்டு முழுதும் தேவைப்படுகிறது. இரு மாவட்டங்களிலும் உள்ள பிரதான விவசாய நிலங்கள், பெரும்பாலும் ஏரி பாசனத்தை நம்பியே உள்ளன.
ஆற்று பாசனம், கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறு ஆகியவை வாயிலாக, குறைந்த எண்ணிக்கையிலான நிலங்களே பயன் பெறுகின்றன.
ஆனால், இரு மாவட்டத்தின், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள், ஏரிகள் வாயிலாகவே பயன்பெறுகின்றன. ஏரிகளுக்கு தேவையான தண்ணீர், வடகிழக்கு பருவமழை சமயத்தில் அதிக அளவு கிடைக்கிறது.
அப்போது கிடைக்கும் மழைநீரை அனைத்து ஏரிகளிலும் தேக்கி வைத்து, ஆண்டு முழுதும் பயன்படுத்துகின்றனர். நவரை, சம்பா, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களுக்கும், இந்த ஏரி தண்ணீர் அதிகளவு கைகொடுக்கிறது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை, விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இதன் வாயிலாக, 1,22,742 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியும்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், 528 ஏரிகள் உள்ளன. இதன் வாயிலாக, 1,30,376 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியும். இரு மாவட்டங்களிலும், 2.52 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், ஏரிகள் வாயிலாக மட்டுமே பயன்பெறுகின்றன.
நீர்வள ஆதாரத்துறையின் தற்போதைய கணக்கெடுப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஏரிகளில் 100 சதவீதமும், 31 ஏரிகளில் 75 சதவீதமும், 107 ஏரிகளில் 50 சதவீதமும், 169 ஏரிகளில் 25 சதவீதமும், 201 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் கீழ் தண்ணீர் கையிருப்பு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 370 ஏரிகளில் 50 சதவீத தண்ணீர் கூட கையிருப்பில் இல்லை.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2 ஏரிகளில் 100 சதவீதமும், 53 ஏரிகளில் 75 சதவீதமும், 75 ஏரிகளில் 50 சதவீதமும், 117 ஏரிகளில் 25 சதவீதமும், 134 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் கீழ் தண்ணீர் கையிருப்பில் உள்ளது. மொத்த ஏரிகளில், 251 ஏரிகளில் 50 சதவீத தண்ணீர் கூட இல்லை.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பினால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12.32 டி.எம்.சி., தண்ணீரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 9.95 டி.எம்.சி., தண்ணீரும் தேக்கி வைக்க முடியும். இரு மாவட்டங்களிலும் சேர்த்து, 22.27 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழலில், இம்மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழை, மிக அவசியமாக பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, இம்முறை இயல்பை காட்டிலும் கூடுதலாக பருவமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தண்ணீர் குறைவாக உள்ள ஏரிகளுக்கு, பருவமழை சமயத்தில் பெய்ய உள்ள மழை பெருமளவில் கைகொடுக்கும் என, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.