/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மிச்சமான ரூ.270 கோடி !:தென்சென்னை வெள்ள பாதிப்பை தடுக்க மாற்று வழியில் திட்டம்
/
மிச்சமான ரூ.270 கோடி !:தென்சென்னை வெள்ள பாதிப்பை தடுக்க மாற்று வழியில் திட்டம்
மிச்சமான ரூ.270 கோடி !:தென்சென்னை வெள்ள பாதிப்பை தடுக்க மாற்று வழியில் திட்டம்
மிச்சமான ரூ.270 கோடி !:தென்சென்னை வெள்ள பாதிப்பை தடுக்க மாற்று வழியில் திட்டம்
UPDATED : பிப் 17, 2024 08:22 AM
ADDED : பிப் 17, 2024 01:54 AM

சென்னை, கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை, கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தானாகவே வடியும் வாய்ப்பு உள்ளதால், 270 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட வடிகால் கட்டமைப்பு பணிகள் கைவிடப்பட்டுள்ளன. அதேநேரம், கோவளம் ஒருங்கிணைந்த பகுதியில், 1,330.54 கோடி ரூபாய் மதிப்பில், 283.18 கி.மீ., மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், கூவம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணி, கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த வடிகால் பணி, கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் என, மூன்று திட்டங்கள் வாயிலாக மாநகர் முழுதும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், கூவம் ஒருங்கிணைந்த வடிகால் பணி முடிவடைந்த நிலையில், கொசஸ்தலையாறு பணிகள் துவங்கி, 60 சதவீதத்திற்கும் மேல் முடிக்கப்பட்டுள்ளன.
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் பணிகள், எம்.1 - பள்ளிக்கரணை பகுதிகள்; எம்.2 - தெற்கு பகிங்ஹாம் கால்வாய்; எம்.3 தெற்கு கடற்கரை பகுதிகள் என, மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் துவங்கின.
இவற்றில், சென்னை கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது.
இப்பகுதி, மணற்பாங்கானது. மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தை சமாளிக்கும் வகையில், இயற்கையாகவே நீர் வடியும் அமைப்புடன் உள்ளது. வங்கக்கடல் நீர் உட்புகாமல் இருக்க, கடற்கறையோரம் சதுப்பு நில பகுதிகள் அமைந்துள்ளன.
கடந்த 40 ஆண்டுகளாக புயல், தொடர் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், கொட்டிவாக்கம் - உத்தண்டி பகுதிகளில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 2015 கனமழை பெரு வெள்ளம் கூட, இப்பகுதி குடியிருப்புகளை சூழவில்லை.
இதன் வழியே, கடலில் கழிவுநீர் கலந்து, கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். தவிர, 70 அடியில் கிடைக்கும் நிலத்தடி நீருக்கும் பாதிப்பு வரும். இதனால், கொட்டிவாக்கம் - -உத்தண்டி இடையே வசிக்கும் கடற்கரையோர மக்கள், தண்ணீர் கிடைக்காலம் பெரிதும் சிரமப்படுவர்.
எனவே, இங்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
குளறுபடியான இத்திட்டத்தை எதிர்த்து, நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையான மணற்பாங்கான பகுதிகளில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்துவதை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இதன் வாயிலாக, 270 கோடி ரூபயை மாநகராட்சி சேமித்துள்ளது.
இதற்கிடையே, இதர பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 283.18 கி.மீ., நீளத்திற்கு, 1,330.54 கோடி ரூபாய் மதிப்பில் தனியாரிடம் 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் பணிகள், துரைப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் நடைபெற உள்ளது.
இதற்காக, 1,330.54 கோடி ரூபாய் மதிப்பில், 283.18 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது.
முதற்கட்டமாக, நங்கநல்லுார், மேடவாக்கம், மயிலை பாலாஜி நகர் பகுதிகளில், 41.77 கி.மீ., நீளத்திற்கு, 150.45 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, 77 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையடையும்.
அதேபோல், புவனேஸ்வரி நகர், புழுதிவாக்கம், கண்ணகி நகர், மடிப்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர், சுனாமி நகர், எம்.சி.என்.நகர் மற்றும் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில், 120.55 கி.மீ., நீளத்திற்கு 445.03 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் 46 சதவீதம் முடிந்துள்ளன. பணிகளை 2025க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சாய்ராம் அவென்யூ, கண்ணப்பன் நகர், கஜூரா கார்டன் நகர், ரேடியோ காலனி, தலைமை செயலக காலனி, ஒக்கியம் துரைப்பாக்கம், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தால், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களைச் சேர்ந்த ஒன்பது லட்சம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -