/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொகுசு காரில் கஞ்சா கடத்திய3 பேர் கைது
/
சொகுசு காரில் கஞ்சா கடத்திய3 பேர் கைது
ADDED : நவ 28, 2024 02:43 AM
துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில், இரு தினங்களுக்கு முன் நள்ளிரவு, துரைப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.
துரைப்பாக்கத்தில் இருந்து டைடல் பார்க் நோக்கி, 'கியா சோனட்' என்ற சொகுசு கார், அதிவேகமாகவும், இதர வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் தாறுமாறாக வந்தது.
ரோந்து போலீசார், அரை கி.மீ., துாரம் சென்று காரை மடக்கினர். காரில் இருந்த ஒரு நபர், ஒரு பையை வெளியே நடைபாதை நோக்கி வீசினார்.
போலீசார், பையை சோதனை செய்தபோது, அதில் அரை கிலோ கஞ்சா, இ - சிகரெட் பாக்கெட்கள், கஞ்சா எடை இயந்திரம் உள்ளிட்டவை இருந்தன. காரில் இருந்த ஓட்டுனர் உட்பட மூன்று பேர் போதையில் இருந்தனர்.
விசாரணையில் அவர்கள், வடபழனியைச் சேர்ந்த தலைமையாசிரியை மகன் சண்முகராம், 27, பித்தளை பாத்திரம் தயாரிப்பு நிறுவனரின் மகன் விஷால், 21, ஒப்பந்ததாரர் மகன் கார்த்திக், 23, என தெரிந்தது.
கஞ்சா, இ - சிகரெட் பாக்கெட்கள், எடை இயந்திரம், கார், இரண்டு ஐ - போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், போதையில் இருந்ததால் மூன்று பேரையும் மறுநாள் வர சொல்லி அனுப்பினர். நேற்று முன்தினம், மூன்று பேரும் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
விசாரணையில், ஐ.டி., ஊழியர்கள், விடுதிகளில் பார்ட்டிக்கு செல்வோரை குறிவைத்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்வது தெரிந்தது.
மூன்று பேரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு கஞ்சா எப்படி வந்தது, மொத்த வியாபாரிகள் யார், யார் என, தீவிர விசாரணை நடத்துகின்றனர்.