ADDED : ஜன 12, 2025 02:13 AM
கீழ்ப்பாக்கம்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில், கடந்த 9ம் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
தாமதமாக வந்த மாணவர்களை, கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்காததால், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பில், கோஷம் எழுப்பி பேரணியாக சென்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்த, பிராட்வே -- கோயம்பேடு செல்லும் 'தடம் எண்: '15பி' மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, பேருந்தின் கூரையில் ஏறிய செங்குன்றத்தைச் சேர்ந்த ஜீவா, 20, கன்னிகைபேர் பகுதியைச் சேர்ந்த பவித்ரன், 20, திருவள்ளூரைச் சேர்ந்த புவியரசன், 19, ஆகிய மூவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் பச்சையப்பன் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரையும், நேற்று முன்தினம் இரவே போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அதேபோல், சம்பவத்தன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, 30 மாணவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளன.