/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை 30,000 டன் ! :நான்கு சேமிப்பு கிடங்குகள் அமைக்க முடிவு செங்கல்பட்டு, மார்ச் 6--
/
நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை 30,000 டன் ! :நான்கு சேமிப்பு கிடங்குகள் அமைக்க முடிவு செங்கல்பட்டு, மார்ச் 6--
நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை 30,000 டன் ! :நான்கு சேமிப்பு கிடங்குகள் அமைக்க முடிவு செங்கல்பட்டு, மார்ச் 6--
நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை 30,000 டன் ! :நான்கு சேமிப்பு கிடங்குகள் அமைக்க முடிவு செங்கல்பட்டு, மார்ச் 6--
ADDED : மார் 06, 2024 12:16 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில், கீரப்பாக்கம், சிலாவட்டம் பகுதிகளில், 30,000 டன் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில், தலா இரண்டு தானிய கிடங்கு அமைக்க, 28.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளை ஓராண்டுக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு போகம் விளைவிக்கப்படுகிறது.
பாலாறு, ஏரிகள், ஆழ்துளை கிணறு என, நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில், 1,67,500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நெல் அறுவடை செய்வதற்கு முன், மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கும்.
அதன்பின், வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கிராமங்களில் ஆய்வு செய்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, இடங்களை தேர்வு செய்வர்.
அதன்பின், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் உத்தரவிடுவார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கொள்முதல் நிலையங்களில் ஊழியர்களை நியமித்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்.
கடந்த 2019ம் ஆண்டில் இருந்து, நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக தானிய கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன.
இந்த சேமிப்பு கிடங்குகளில், மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருக்க, தார்ப்பாய் பயன்படுத்தி மூடி வைக்கின்றனர்.
ஆனால், கனமழை பெய்தால், நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின்றன.
இதனால், நெல் மூட்டைகளை பாதுகாக்க, சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் அரசிடம் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், தானியம் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான நிலம் ஒதுக்கித்தர, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், கலெக்டரிடம் தெரிவித்தனர்.
அதன்பின், சிலாவட்டம் பகுதியில், 10 ஏக்கர் நிலம் வாணிபக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின், தானிய கிடங்கு கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிலாவட்டத்தில், தலா 15,000 டன் நெல் மூட்டைகள் பாதுகாக்கும் வகையில், இரண்டு தானிய கிடங்குகள் அமைக்க, 14.42 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
அதேபோல், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்திலும், அதே அளவு நிதியில் இரண்டு சேமிப்பு கிடங்குகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
தானிய கிடங்குகள் கட்டுமான பணிகளை, கடந்த பிப்., 27ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதையடுத்து, தானிய கிடங்கு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில், தலா இரண்டு தானியம் சேமிப்பு கிடங்குகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. ஓராண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள்,
செங்கல்பட்டு.

