/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் விதிமீறிய 31 வாகனங்கள் பறிமுதல்
/
செங்கையில் விதிமீறிய 31 வாகனங்கள் பறிமுதல்
ADDED : நவ 22, 2025 01:40 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பள்ளி மாணவர்களை அதிகமாக ஏற்றிச் சென்ற, 31 வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், ஆட்டோ மற்றும் டாடா மேஜிக் வேன்களில், விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது குறித்து சமூக ஆர்வலர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயலட்சுமி, போக்குவரத்து ஆய்வாளர் அனந்தராஜ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் இணைந்து, நகராட்சி பகுதியில், வாகன தணிக்கை செய்தனர்.
இதில், 31 ஆட்டோ மற்றும் டாடா மேஜிக் வாகனங்கள், பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றிச் சென்றதால், அவற்றை பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறிய, 31 வாகனங்களுக்கு, 2.58 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ கூறுகையில்,''ஆட்டோக்களில் மூன்று பேரை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

