/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கோரி 3,136 பேர்...காத்திருப்பு!: ஜாதி சான்றிதழ், மருத்துவ காப்பீடு பெற முடியாமல் அவதி
/
செங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கோரி 3,136 பேர்...காத்திருப்பு!: ஜாதி சான்றிதழ், மருத்துவ காப்பீடு பெற முடியாமல் அவதி
செங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கோரி 3,136 பேர்...காத்திருப்பு!: ஜாதி சான்றிதழ், மருத்துவ காப்பீடு பெற முடியாமல் அவதி
செங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கோரி 3,136 பேர்...காத்திருப்பு!: ஜாதி சான்றிதழ், மருத்துவ காப்பீடு பெற முடியாமல் அவதி
ADDED : பிப் 09, 2025 09:09 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் வரை, புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து, 3,136 பேர் காத்திருக்கின்றனர். ரேஷன் கார்டு கிடைக்க தாமதமாவதால் ஜாதி சான்றிதழ், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
ரேஷன் கார்டுகள் வைத்துள்ள இப்பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசின் நலத்திட்டங்கள், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற, ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் வரை, புதிய ரேஷன் கார்டு கேட்டு, 3,136 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த விண்ணப்பங்களை, வட்ட வழங்கல் அலுவலர்கள், ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின், தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, அரசுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் வாயிலாக பரிந்துரை செய்யப்படும்.
இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் அரசு சலுகைகள் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை, இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏழைகள் உயர் சிகிச்சைகள் பெறுவதற்கு, அரசின் காப்பீடு திட்டம் கைகொடுத்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பெறவும், அதிகமானோர் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.
ரேஷன் கார்டு தான், எல்லாவற்றுக்கும் பிரதான ஆவணம் என்பதால், ஏழைகள் மருத்துவ காப்பீடு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டத்தில் பயன்பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே, புதிய ரேஷன் கார்டு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. மனுக்கள் மீது விசாரணை முடிந்து, இரண்டு மாதங்களில், தகுதியானோருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
- மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள்,
செங்கல்பட்டு.