/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
4 நவீன ஆம்புலன்ஸ்கள் ஏர்போர்ட்டில் இணைப்பு
/
4 நவீன ஆம்புலன்ஸ்கள் ஏர்போர்ட்டில் இணைப்பு
ADDED : பிப் 18, 2025 11:50 PM

சென்னை,சென்னை விமான நிலையத்தில், அதிநவீன இரண்டு தீயணைப்பு வண்டிகள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட நான்கு புதிய ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
விமான நிலையங்களில் இக்கட்டான சூழ்நிலையை கையாள வசதியாக, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ ஆம்புலன்ஸ்கள் இருப்பது கட்டாயம். இதற்காக சென்னை விமான நிலையத்தில், சர்வதேச தரத்திலான தீயணைப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
தற்போது, ஏழு தீயணைப்பு வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாத இரண்டு நவீன தீயணைப்பு வாகனங்கள், நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
புதிய தீயணைப்பு வண்டியில், ஒரே நேரத்தில், 10,000 லிட்டர் தண்ணீர், 1,300 லிட்டர் 'போர்ம் நுரை'யை சேமித்து வைக்க முடியும். தீவிபத்து ஏற்பட்டால், 30 வினாடிகளில், 80 கி.மீ., வேகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுப்படுத்த முடியும். இதன் இன்ஜின் திறன், 705 குதிரை திறனில் இருப்பதால், எத்தகைய நிலையையும் எளிதில் சமாளிக்கலாம்.
ஆம்புலன்ஸ்
விமான பயணியருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால், விமானங்கள் தரையிறங்கியதும், மருத்துவ குழு ஆம்புலன்சில் மீட்டுச் செல்லும். இதற்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்தன. தற்போது, உயர் மருத்துவ வசதியுடன் இணைக்கப்பட்ட, நான்கு புதிய ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
நான்கு புதிய ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் செயல்பாட்டை, சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் துவக்கி வைத்தார்.