/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் 4 டாஸ்மாக் மது கடைகள் திருட்டு, பாலியல் சீண்டல் அதிகரிப்பு
/
வண்டலுாரில் 4 டாஸ்மாக் மது கடைகள் திருட்டு, பாலியல் சீண்டல் அதிகரிப்பு
வண்டலுாரில் 4 டாஸ்மாக் மது கடைகள் திருட்டு, பாலியல் சீண்டல் அதிகரிப்பு
வண்டலுாரில் 4 டாஸ்மாக் மது கடைகள் திருட்டு, பாலியல் சீண்டல் அதிகரிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:04 PM
வண்டலுார்:வண்டலுார் ஊராட்சியில், நான்கு டாஸ்மாக் கடைகள் கனஜோராக இயங்கி வருகின்றன. இதனால், போதையில் மது பிரியர்கள், பள்ளி செல்லும் மாணவியரை கிண்டல் செய்வதால், பகுதிவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக அல்லது பகுதி பகுதியாக மூடி, பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், வண்டலுார் ஊராட்சி 899 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இங்கு 15 வார்டுகளில், 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் பொழுது போக்கவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் பூங்கா அமைக்கும்படி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், வண்டலுாரில் நான்கு டாஸ்மாக் மதுக்கடைகள், அரசால் இயக்கப்படுகின்றன.
இதனால், வெளி இடங்களிலிருந்தும் அதிகமான மது பிரியர்கள், இங்குள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்து மது அருந்துகின்றனர்.
தற்போது, மது பிரியர்கள் அதிகம் உலாவரும் பகுதியாக வண்டலுார் மாறி வருவதாகவும், குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு, 25,000 நபர்கள் வசிக்கும் பகுதிக்கு, ஒரு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது.
அதன்படி கணக்கிட்டால், வண்டலுாரில் இரண்டு ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒன்று கூட இல்லை. இதேபோல அரசு இ - சேவை மையமும் இல்லை. இதுகுறித்து, ஆட்சி நிர்வாகம் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.
இதனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் காலை, மாலை வேளையில் நடைபயிற்சி செய்ய, குழந்தைகள் விளையாடி மகிழ இங்கு பூங்கா இல்லை.
ஆனால், நான்கு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன.
வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கல் ஏரியை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைத்து, சுற்றுசூழல் பூங்கா அமைத்து தரும்படி, 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, இங்கு ரயில் பாதை அருகில், வண்டலுார் ஏரி அருகில் தலா இரண்டு என, நான்கு டாஸ்மாக் கடைகளை அரசு அமைத்துள்ளது.
இதில், ரயில் பாதை அருகே உள்ள டாஸ்டாக் கடை வழியாகவே, அரசு மேல்நிலை பள்ளிக்கு மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.
பள்ளி விட்டு வரும் மாணவியரை, மது பிரியர்கள் போதை மிகுதியில் கிண்டல் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், அவ்வழியே செல்ல மாணவியர், பெண்கள் அச்சப்படுகின்றனர். திருட்டு சம்பவங்களும் நடந்து வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு டாஸ்மாக் கடைகள் இயங்கிவரும் ஊராட்சியாகவும், தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் இயங்கிவரும் ஊராட்சியாகவும், வண்டலுார் உள்ளது.
மதுபிரியர்கள் அதிக எண்ணிக்கையில் குவிவதால், உள்ளூர்வாசிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
வண்டலுாரில் சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகளை அளிக்க தகுதியான பயிற்சியாளர்கள் இருந்தும், குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க விளையாட்டு மைதானங்கள் இல்லை.
எனவே, வண்டலுாரில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக அல்லது பகுதி பகுதியாக மூடி, பொழுதுபோக்கு பூங்கா, சிலம்பம், கராத்தே பழக மைதானங்கள் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.