/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
46,809 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செங்கையில் 2 ஆண்டில் 434 பேர் கைது
/
46,809 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செங்கையில் 2 ஆண்டில் 434 பேர் கைது
46,809 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செங்கையில் 2 ஆண்டில் 434 பேர் கைது
46,809 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செங்கையில் 2 ஆண்டில் 434 பேர் கைது
ADDED : பிப் 08, 2025 01:05 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, 418 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 434 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 46,809 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட வட்ட வழங்கல் துறை சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரிசி ஆலைகளில் இருந்து, லாரிகள் வாயிலாக ரேஷன் கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பெரும்பாலானோர் ரேஷன் அரிசி பெறுவதில்லை என கூறப்படுகிறது.
இந்த அரிசியை, சட்டவிரோதமாக பெறும் சில முதலாளிகள், புரோக்கர்கள் வாயிலாக அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர்.
தனியார் அரிசி ஆலைகளில், 'பாலிஸ்' செய்யப்பட்டு, 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை, வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரி மற்றும் ரயில்கள் வாயிலாக கடத்தியும், கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் மற்றும் குடிமை பொருள் பறக்கும் படை தாசில்தார் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2023ல், 17,485 கிலோ அரிசியும், 2024ல், 27,000 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், 333 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
திருப்போரூர் அடுத்த மானாம்பதி ரைஸ் மில் பகுதியில், செங்கல்பட்டு அடுத்த பொருந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் என்பவரிடம், 143 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரை கிராமத்தைச் சேர்ந்த பெரியாண்டவன் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்து, 1,848 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திம்மாவரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உதவி தர ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
பெரியாண்டவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2023 முதல், 2025 ஜன., மாதம் வரை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 418 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில், 434 பேர் கைது செய்யப்பட்டு, 46,809 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.