/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் 494 'போக்சோ' வழக்குகள்.. தேக்கம்:விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
/
செங்கை மாவட்டத்தில் 494 'போக்சோ' வழக்குகள்.. தேக்கம்:விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கை மாவட்டத்தில் 494 'போக்சோ' வழக்குகள்.. தேக்கம்:விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கை மாவட்டத்தில் 494 'போக்சோ' வழக்குகள்.. தேக்கம்:விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2025 11:39 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், மொத்தம் பதிவான 980 'போக்சோ' வழக்குகளில் 494 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில், 227 வழக்குகள் குற்றப் பத்திரிகைகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அழகேசன் நகரில், மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம், 2019 டிச., 15ம் தேதி துவக்கப்பட்டது.
இந்நீதிமன்ற கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், மாமல்லபுரம், தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, கிண்டி உள்ளிட்ட 13 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.
மாவட்டத்தில், சிறுமியர் பாலியல் பலாத்காரம், சிறுமியருக்கு பாலியல் சீண்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோர், போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்.
அதன் பின், 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஓராண்டுக்குள் வழக்கிற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
ஆனால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட மகளிர் காவல் நிலையங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆய்வு அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால், வழக்குகளை விரைந்து முடிப்பதில், சிக்கல் ஏற்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் மாணவியர் மற்றும் தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த சிறுமியர், இளம்பெண்கள் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி தனியார் பெண்கள் விடுதிகள், தனியார் காப்பகங்களிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கின்றன. இதில் பாதிக்கப்படும் பெண்கள், போலீசில் சென்று புகார் அளிக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இதையும் மீறி காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் அளித்தாலும், புகாரை பெற்று வழக்கு பதிவதில் போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
இதனால், சிறுமியரிடம் அத்துமீறும் பெரும்பாலான சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. இந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் கடந்த அக்., 31ம் தேதி வரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் 494 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில், 227 வழக்குகள் குற்றப் பத்திரிகைகள் நிலுவையில் உள்ளன.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள போக்சோ வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

