sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்

/

5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்

5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்

5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்


ADDED : ஜூலை 07, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்:பல்லாவரம் -- துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கப் பணி, ஐந்து ஆண்டுகள் ஆகியும் முழுமை பெறாததால், ஈச்சங்காடு சந்திப்பு முதல் பல்லாவரம் வரை வாகன ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தினமும் வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் நிலை மேலும் அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகரான பல்லாவரம், 15 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு, கல்வி நிலையம், வணிக வளாகம், நகைக்கடை, ஹோட்டல்கள், திருமண மண்டபம் என, அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கேற்றார் போல், வாகன போக்குவரத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி., - ராஜிவ் காந்தி சாலைகளுடன், பரங்கிமலை - மடிப்பாக்கம், வேளச்சேரி - மேடவாக்கம் சாலைகளையும் இணைத்து, ஒரு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, 2003ல், 10.6 கி.மீ., நீளத்திற்கு, நான்கு வழிப்பாதையாக ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

கிழக்கு கடற்கரை, ராஜிவ் காந்தி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விரைவாக, ரேடியல் சாலை வழியாக ஜி.எஸ்.டி., சாலையை அடைகின்றன.

பல்லாவரம், குரோம்பேட்டை, குன்றத்துார், மீனம்பாக்கம், பூந்தமல்லி, பம்மல் போன்ற சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தோரும், இதன் வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்கின்றனர்.

இத்தடத்தில் பயணிக்கும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, ரேடியல் சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.

இத்திட்டத்தில், ஒரு சில இடங்களில் மட்டுமே, விரிவாக்கம் செய்த இடங்களில் சாலை அமைத்து, மழைநீர் கால்வாய் கட்டியுள்ளனர்.

பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்படவில்லை. ஜல்லி கொட்டியதோடு அப்படியே விட்டுவிட்டனர்.

மழைநீர் கால்வாய்


தற்போது, அந்த இடங்கள் முழுக்க தனியார் வாகனங்களின் நிறுத்தமாகவே மாறிவிட்டன. குறிப்பாக, ஜமீன் மற்றும் பழைய பல்லாவரம் பகுதிகளில், தொடர்ச்சியாக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

மழைநீர் கால்வாய்கூட தொடர்ச்சியாக அமைக்கப்படவில்லை. பாதி பாதியாக கட்டி, அப்படியே விட்டுள்ளனர்.

மேலும், அந்த கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறி, பல்லாவரம் முதல் கீழ்க்கட்டளை ஏரி வரை துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் பெருகிவிட்டது.

ஈச்சங்காடு மேம்பால அணுகு சாலையிலும் வரிசையாக தனியார் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.

அதேபோல், ஈச்சங்காட்டில் இருந்து அணுகு சாலை வழியாக வந்து, ரேடியல் சாலையில் ஏறும் இடத்தில், ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுவதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடுமையான நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், விரிவாக்கம் மற்றும் கால்வாய் பணி முழுமையாக முடியாததால், ஒவ்வொரு நாளும் கடும் நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

கீழ்க்கட்டளை முதல் நாராயணபுரம் வரை, வர்த்தக பகுதியாக மாறியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் ஏராளமான உணவகங்கள் செயல்படுகின்றன.

இவற்றுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடமாக ரேடியல் சாலை மாற்றப்பட்டு உள்ளது.

விபத்து அபாயம்


அதேபோல, வாகன பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையங்களுக்கு வரும் வாகனங்களும், திருமண மண்டபங்களுக்கு வரும் வாகனங்களும் ரேடியல் சாலையில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

இவ்விஷயத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தலையிட்டு, நெடுஞ்சாலைத் துறையினருடன் கூட்டம் நடத்தி, விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

3 மாதங்களில் முடிக்கப்படும்


பல்லாவரம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை சாலை பணி முடிந்துவிட்டது. மழைநீர் கால்வாய் பணி, 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஆங்காங்கே கால்வாயை மட்டும் இணைக்க வேண்டியுள்ளது. இப்பணி, அடுத்த இரண்டு மாதங்களில் முடிந்து விடும். தொடர்ந்து, அணுகு சாலை பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மின் கம்பம் அகற்றாதது ஒரு காரணமாக இருந்தது. சில இடங்களில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், பல்லாவரம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை, ஆறு வழிச்சாலை பணி முழுதாக முடிக்கப்படும்.

- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

குழாய் பதிப்பில் தாமதம்


பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை விரிவாக்க திட்டத்தில், மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் போதெல்லாம், தாம்பரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்பட்டது. பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் பிரச்னை ஏற்படுவதற்கு இதுவே காரணம். பாதாள சாக்கடை குழாய் சேதப்படுத்தப்பட்ட இடங்களில், 20 கோடி ரூபாயில் புதிய குழாய் பதிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனாலே சாலை விரிவாக்க பணியும் இழுபறியாக இருந்துள்ளது. தற்போது, குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சியே மேற்கொண்டு உள்ளது. ஐந்து ஆண்டுகளாக நடக்கும் ஆறு வழிச்சாலை பணிக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனமே காரணம்.

- மாநகராட்சி அதிகாரிகள்

பூக்கடைகளால் நெரிசல்


பூக்கடைகளால் ஏற்படும் நெரிசல் குறித்து முடிச்சூர்வாசிகள் கூறியதாவது:தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. முடிச்சூர் சாலை வழியாக இறங்கும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, முறையாக பராமரிக்கப்படவில்லை. மேம்பால கீழ்ப்பகுதி முழுக்க ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு, ஏகப்பட்ட பூக்கடைகள் உள்ளன. ஆரம்பத்தில், பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த கடைகள், மெல்ல மெல்ல வெளியே வந்து, தற்போது, அணுகு சாலையை ஆக்கிரமித்துள்ளன.
போட்டி போட்டுக்கொண்டு சாலையிலேயே பூ, மாலைகளை தொங்க விடுகின்றனர். சாலையிலே வாகனங்களை நிறுத்தி பூ, மாலைகளை வாங்குவதால், அதிக போக்குவரத்து உடைய அணுகு சாலையில், தினமும் நெரிசல் ஏற்படுகிறது. அவசரத்திற்கு, ஆம்புலன்ஸ் கூட போகமுடியவில்லை. சாலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வரும் நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சி நிர்வாகமும், இச்சாலைகளிலும் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us