/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
7 மாத குழந்தை உட்பட 7 பேரை குதறிய தெருநாய்
/
7 மாத குழந்தை உட்பட 7 பேரை குதறிய தெருநாய்
ADDED : பிப் 09, 2025 12:32 AM

சென்னை,தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறும் நிலையில், நேற்று ஒரே நாளில் வேளச்சேரியில், 7 மாத குழந்தை, உட்பட ௭ பேரை, தெருநாய் கடித்துக் குதறியுள்ளது. வீட்டிற்கு வெளியே நின்றாலும், வாகனங்கள் சென்றாலும், நடந்து சென்றாலும், அவை கூட்டமாக துரத்திக் கடிப்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்தாண்டு, 48,583 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாமலும், வளர்ப்பு நாய்கள் குறித்த கணக்கெடுப்பை முழுதாக எடுக்க முடியாமலும், சென்னை மாநகராட்சி திணறி வருகிறது. இதனால், சாலையில் செல்வோரை மட்டுமின்றி, வீட்டுக்கு வெளியில் நிற்போரையும், நாய்கள் கடித்துக் குதறும் சம்பவம், சென்னையில் தொடர்கிறது. நாய்க்கடியால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்தாண்டு மே மாதம், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 5 வயது சிறுமியை, 'ராட்வீலர்' இனத்தைச் சேர்ந்த, இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின. அதே மாதம், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில், 5 வயது சிறுவனையும் நாய் கடித்தது.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, சூளைமேடு பகுதியில் கடைக்கு சென்ற கணவன் சுரேஷ், மனைவி நீலா ஆகியோரை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்தனர்.
இதுபோன்ற வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்கள் மனிதர்களை துரத்திக் கடித்து வந்த சம்பவம் தொடர்ந்து வந்ததால், நாய் வளர்ப்போர் மற்றும் தெருநாய்களுக்கு உணவு அளிப்போருக்கு, மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
நாளடைவில், அக்கட்டுப்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மறந்ததால், சென்னையில் ஒரே நாளில், இரண்டு குழந்தைகள் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
வேளச்சேரி, பாரதி நகரைச் சேர்ந்த நாகேந்திரன். இவரது ஏழு மாத மகள் கதிர்மதிக்கு, நாகேந்திரனின் தாய் நேற்று, வீட்டிற்கு வெளியே நின்று உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அங்கு வந்த தெருநாய், அவரை கடிக்க வந்தபோது, அந்நாயை தடுத்துள்ளார். அப்போது, இடுப்பில் இருந்த ஏழு மாத கதிர்மதியின் வலது தொடையில் தெருநாய் கடித்தது.
அதேபோல், வேளச்சேரி பேபிநகரைச் சேர்ந்த ஹாப்யூஸ் என்பவரின் மகன் அஷ்ரப்புல், 9, என்ற சிறுவன், அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனது வலது காலில் தெருநாய் கடித்தது.
இரண்டு குழந்தைகளும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த வகையில் ௭ மாத குழந்தை உட்பட ௭ பேரை தெரு நாய்கள் கடித்துள்ளன.
இந்த சம்பவங்களை தொடர்ந்து, மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரிகள் நேற்று, வேளச்சேரி பகுதியில், தெருநாய்கள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கால்நடை டாக்டர் ஆதிரை கூறுகையில், ''இரண்டு நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளை கடித்த நாய், இன்றைக்குள் பிடிக்கப்படும். இருவரையும் ஒரே நாய் கடித்ததா என்பது தெரியவில்லை. வேளச்சேரி பகுதியில், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்படும்,'' என்றார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், ஒவ்வொரு ஆண்டும் 20,000க்கு ம் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.
மேலும், புகாரின் அடிப்படையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு மட்டும் தெருநாய் தொல்லைகள் குறித்து, 22,229 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது, தெருநாய்கள் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மண்டலங்களிலும், நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.