/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 கிராம வாசிகள் உண்ணாவிரதம்
/
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 கிராம வாசிகள் உண்ணாவிரதம்
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 கிராம வாசிகள் உண்ணாவிரதம்
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 கிராம வாசிகள் உண்ணாவிரதம்
ADDED : அக் 20, 2024 12:30 AM

அச்சிறுபாக்கம்:செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு நெற்குணம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி அருகே வயலுார், நெற்குணம், சிறுவிளாம்பாக்கம், புளியனி, துாது விளம்பட்டு, கடப்பேரி, புத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில், ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, இப்பகுதி வாசிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயமே பிரதான தொழில்.
இந்நிலையில், நெற்குணம் அடுத்த வயலுார் நிலப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத் துறையினர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வயலுார், நெற்குணம், சிறுவிளாம்பாக்கம், புளியனி, துாது விளம்பட்டு, கடப்பேரி, புத்தமங்கலம் கிராம மக்கள் ஒன்றிணைந்து, கல்குவாரி எதிர்ப்புக் குழு ஆரம்பித்து உள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் வயலுார் கிராமத்தில், கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து, சில நாட்களுக்கு முன் மனு அளித்தனர். தொடர்ந்து, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜனை சந்தித்தும் மனு அளித்தனர்.
நேற்று, நெற்குணம் பேருந்து நிலையம், முருகன் கோவில் அருகே, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் மற்றும் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜனை, திங்கட்கிழமை சந்தித்து, பேச்சு வார்த்தையில் ஈடுபடும்படி, கிராம மக்களிடம் வட்டாட்சியர் துரைராஜன் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட கிராம வாசிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு, கலைந்து சென்றனர்.