/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடையாளம் தெரியாத 70 சடலங்கள் காத்திருப்பு! போலீசாரின் பணிச்சுமையால் தேக்கம்
/
அடையாளம் தெரியாத 70 சடலங்கள் காத்திருப்பு! போலீசாரின் பணிச்சுமையால் தேக்கம்
அடையாளம் தெரியாத 70 சடலங்கள் காத்திருப்பு! போலீசாரின் பணிச்சுமையால் தேக்கம்
அடையாளம் தெரியாத 70 சடலங்கள் காத்திருப்பு! போலீசாரின் பணிச்சுமையால் தேக்கம்
ADDED : ஜன 19, 2024 01:11 AM
தீபாவளி பண்டிகையில் இருந்து, சென்னை போலீசார் தொடர்ந்து பணிச்சுமையால் அவதிப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் 70க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் சடலங்கள் தேக்கமடைந்துள்ளன. இவற்றில் மழை, குளிரால் அதிகம் பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னைக்கு வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
அவர்களில், குடும்பத்தினரை பிரிந்து வருவோர் பெரும்பாலும், மெரினா, கோயம்பேடு பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்க துவங்கி விடுகின்றனர்.
ஆதரவற்ற நிலையில் காணப்படும் இவர்கள், பெரும்பாலும் சென்னை மக்களை நம்பியே வாழ்கின்றனர்.
இவர்கள் இறந்தாலும், யார் என்ற விபரம் தெரியாமல், அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் சடலங்களை மீட்டு, அரசு மருத்துவமனைகளில் சேகரித்து வைக்கின்றனர்.
அவ்வாறு சேகரிக்கப்படும் சடலங்களை, அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் யாரும் தேடி வராதபட்சத்தில், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக போலீசாரே அடக்கம் செய்கின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை பாதுகாப்பு, 'மிக்ஜாம்' மழை வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணிகள், நிவாரண தொகை, புத்தாண்டு, பொங்கல், கேலோ இந்தியா விளையாட்டு போட்டி ஆகிய அடுத்தடுத்து பாதுகாப்பு பணியில், மாநகர் போலீசார் பிஸியாக உள்ளனர்.
போலீசாரின், தொடர் பணிச்சுமை காரணமாக, அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற சடலங்கள் தேக்கமடைந்து வருகின்றன.
சென்னை அரசு மருத்துவமனைகளில் 50 முதல் 70 ஆதரவற்ற சடலங்கள், இரண்டு மாதங்களாக தேக்கமடைந்துள்ளன. அதிகபட்சமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 30 சடலங்கள் உள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலோனோர், மழை மற்றும் குளிர் தாங்காமல் இறந்ததாகவும், ரயில் விபத்தில் இறந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது:
சென்னை அரசு மருத்துவமனைகளில் இருந்து வாரத்தில் அதிகபட்சம் ஐந்து முதல் எட்டு ஆதரவற்ற சடலங்கள் வரும். அவற்றை, தன்னார்வ அமைப்புடன் இணைந்து, அந்தந்த போலீசார் அடக்கம் செய்து வந்தனர்.
இரண்டு மாதங்களாக போலீசார் வராததால், அரசு மருத்துவமனைகளில் சடலங்கள் தேங்கி வருகின்றன. நிலைமை இப்படியே சென்றால், 100 சடலங்கள் வரை தேங்கும் நிலை உருவாகும்.
இரண்டு மாதங்களாக பாதுகாக்கப்பட்டு இருக்கும் சடலங்களையாவது, முன்னுரிமை அடிப்படையில் போலீசார் அடக்கம் செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை பாதுகாப்புக்கு பின், சென்னை மற்றும் புறநகரில் அதிகளவு மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு வாரத்திற்கு மேல் நீடித்த மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து நிவாரணம் வழங்கும் இடங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தற்போது கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பாதுகாப்பு என, ஓய்வு இல்லாமல் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இதனால், ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்ய முடியவில்லை. அடுத்த ஒரு வாரத்திற்குள் சடலங்கள் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
- நமது நிருபர் -

