/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
76 வகை அதிநவீன உபகரணங்கள் ஐ.ஐ.டி.,யில் திறந்தவெளி கண்காட்சி
/
76 வகை அதிநவீன உபகரணங்கள் ஐ.ஐ.டி.,யில் திறந்தவெளி கண்காட்சி
76 வகை அதிநவீன உபகரணங்கள் ஐ.ஐ.டி.,யில் திறந்தவெளி கண்காட்சி
76 வகை அதிநவீன உபகரணங்கள் ஐ.ஐ.டி.,யில் திறந்தவெளி கண்காட்சி
ADDED : மார் 04, 2024 01:29 AM

சென்னை : சென்னை, ஐ.ஐ.டி.,யில் பயிலும் சி.எப்.ஐ., மாணவ - மாணவியர் கண்டுபிடித்த, 76 வகையான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகரணங்களின் திறந்தவெளி கண்காட்சி, நேற்று நடந்தது.
இதில், சூரிய சக்தியில் இயக்கும் பந்தய கார், ஆளில்லா வான்வெளி வாகனங்கள், 'அல்ட்ராசானிக்' ஒலியில் இயங்கும் 'மெட்டல் 3டி பிரின்டர்', பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவி உள்ளிட்டவை இடம்பெற்றன.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் இருந்து மாணவ - மாணவியர், தங்கள் பெற்றோருடன் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இதுகுறித்து, ஐ.ஐ.டி.,யின் பொறுப்பு இயக்குனர் மகேஷ் கூறியதாவது:
வரும் 2047ல், தொழில்நுட்ப வல்லரசாக இந்தியா உருவெடுக்க, பணியாளர்களை விட, பணி வழங்குவோர் தான் அதிகம் தேவைப்படுவர்.
இதற்கு ஏற்ப கண்டுபிடிப்புகள் தேவைப்படுகின்றன. ஐ.ஐ.டி., மாணவர்களை, தொழில்முனைவோராக மாற்றும் பொறுப்பு உள்ளது.
இந்த கண்டுபிடிப்புகளால், வரும் 2025ம் ஆண்டில் பட்டதாரிகளாக தேர்ச்சிபெறும் மாணவர்களில் 20 சதவீதம் பேர், வேலைக்குச் சென்ற முதல் நாளிலேயே, தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக வரவேண்டும் என்ற இலக்கை அடைவர்.
அதிநவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த கண்காட்சி முக்கிய பங்காற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறுகையில்,''தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான நிர்மான் உடன் இணைந்து, மாணவர்கள் இந்த கண்டுபிடிப்புகளில் புதுமை படைத்துள்ளனர். மாணவர்களுக்கு வழிகாட்டுதல், கண்டுபிடிப்புகளுக்கான ஆலோசனைகளை, சி.எப்.ஐ., வழங்கி வருகிறது,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் சத்யநாராயணன், சி.எப்.ஐ., மாணவ நிர்வாகக் குழு தலைவர் சார்த்தக் சவுராவ், ஸ்டெல்லாண்டிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அஸ்வினி முப்பாசானி, சி.எப்.ஐ., சென்னை குழு தலைவர் தமயந்தி ஜெயின், சி.எப்.ஐ., ஜபாட் கிளப் திட்ட தலைவர் மாதவன் நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

