/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைப்பற்றப்பட்ட 838 கிலோ கஞ்சா அழிப்பு
/
கைப்பற்றப்பட்ட 838 கிலோ கஞ்சா அழிப்பு
ADDED : ஆக 08, 2025 02:18 AM

செங்கல்பட்டு:தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 27 காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில், பல்வேறு குற்றவாளிகளிடமிருந்து நடப்பாண்டு, 3,000 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதில், இரு தவணைகளாக, 1,304 கிலோ மற்றும் 833.5 கிலோ கஞ்சா, செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் பகுதியில் ஏற்கனவே அழிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1,000 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கையிருப்பில் இருந்த நிலையில், நேற்று 838 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் ஜி.ஜே.மல்டிகிலேவ் நிறுவனத்தின் எரியூட்டி வாயிலாக அழிக்கப்பட்டது.
போலீசார் கூறியதாவது:
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க, கடந்த வாரம் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுப் பகுதி கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதில், 238 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பொருட்களை விற்பனை செய்த 40 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் மாடம்பாக்கம் கண்ணன், 41, சேலையூர் பாலாஜி, 41, சோமங்கலம் முகமது குட்டி, 54, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்தக், 45, அஜித் பண்டிட், 40, ஆகிய ஐந்து நபர்களும், பிரதான குற்றவாளிகள்.
இவர்கள் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.