ADDED : ஆக 02, 2025 11:29 PM

மறைமலை நகர்:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 3,993 கிலோ கஞ்சா, தீயிட்டு அழிக்கப்பட்டது.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, தாம்பரம், ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இங்கு எரித்து அழிப்பது வழக்கம்.
இந்நிலையில், வடக்கு மண்டல காவல் துறை எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 2023ம் ஆண்டு முதல் 1,204 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,993 கிலோ கஞ்சா, நேற்று காலை இங்கு எடுத்து வரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, கஞ்சா எடை சரிபார்க்கப்பட்டு, தீயிட்டு அழிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு நான்கு கோடி ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.