/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு
/
மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு
மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு
மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு
ADDED : அக் 18, 2024 01:03 AM

மாமல்லபுரம்,:மாமல்லபுரம் காவலர் குடியிருப்பில் அதிக சத்தத்துடன் வெடித்த மர்ம பொருளால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், கங்கைகொண்டான் மண்டபம் தெரு உட்புற பகுதியில், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், காவலர் புதிய குடியிருப்பு ஆகியவை, ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. வளாகத்திற்கு வெளியே, சாலையில் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளது.
இவ்வளாகத்தில், 50 ஆண்டுகளுக்கு முந்தைய பாழடைந்த குடியிருப்பு கட்டடங்கள், இடிக்கப்படாமல் உள்ளன. விபத்துகளில் சிக்கிய வாகனங்கள், குற்றச் செயல்களில் பிடிபட்ட வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு, பாழடைந்த பழைய குடியிருப்பு கட்டடத்தில், பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது.
அதனால், கட்டட சுவர் செங்கற்கள் சிதறி, புதிய குடியிருப்பு வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன. மணிகண்டன் என்ற போலீஸ்காரரின் கை, கால்களில் கண்ணாடி சிதறல்கள் கிழித்து காயமடைந்தார். வெடி விபத்தால், சுற்றுப்புற வீடுகள் அதிர்ந்ததாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. பலத்த சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் அங்கு திரண்டனர்.
வெடி விபத்து ஏற்பட்ட கட்டடம் தீப்பற்றி எரிந்தது. மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மேலும் வெடிக்கும் வாய்ப்புள்ளதா என கண்காணித்து, தீ பரவாமல் அணைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறியதாவது:
பாழடைந்த குடியிருப்பு பகுதியில், வழக்கு தொடர்பான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏதேனும் வாகனத்தில், சி.என்.ஜி., அல்லது எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம். வேறு ஏதேனும் வெடித்துள்ளதா என்பது குறித்தும், ஆய்வு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.