/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாரம்பரிய நகரமான மாமல்லைக்கு பிரத்யேக 'லோகோ' எதிர்பார்ப்பு
/
பாரம்பரிய நகரமான மாமல்லைக்கு பிரத்யேக 'லோகோ' எதிர்பார்ப்பு
பாரம்பரிய நகரமான மாமல்லைக்கு பிரத்யேக 'லோகோ' எதிர்பார்ப்பு
பாரம்பரிய நகரமான மாமல்லைக்கு பிரத்யேக 'லோகோ' எதிர்பார்ப்பு
ADDED : பிப் 04, 2024 01:31 AM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் முக்கிய பேரூராட்சியாக விளங்கி வருகிறது. கி.பி. 7 - 8ம் நுாற்றாண்டில், பல்லவர்கள் உருவாக்கிய கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடைவரைகள் என, ஏராளமான சிற்பங்கள் உள்ளன.
'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி மற்றும் கலாசார பிரிவு, அவற்றை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாகவும் அங்கீகரித்து, சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.
ஆசியாவின் ஒரே பாரம்பரிய மரபுக்கலைகள் பயிற்றுவிக்கும் கல்லுாரியாக அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி திகழ்கிறது. சிற்பக் கலைஞர்கள் பெருகி, சிற்ப கைவினை தொழில் சிறந்து விளங்குகிறது. சர்வதேச கற்சிற்ப சிறப்பிடமாக, புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், முறைசாரா மாநாட்டில், 2019ல் இங்கு சந்தித்தனர். 2022ல் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்தாண்டு 'ஜி - 20' நாடுகள் கருத்தரங்க மாநாடுகள் நடத்தப்பட்டன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் பேரூராட்சி, மேலும் சர்வதேச கவனம் பெற்றுள்ளது. மேலும், நகராட்சியாக தரம் உயர்த்த, மன்ற தீர்மான ஒப்புதலை அரசு பெற்றுள்ளது.
இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்திற்கு, 'லோகோ' எனப்படும் பிரத்யேக இலச்சினை சின்னம் உருவாக்க, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழக அரசின் சின்னமாக, ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் கோபுரம் உள்ளது. அதேவேளை, சென்னை, தஞ்சாவூர், மதுரை போன்ற மாநகராட்சி நிர்வாகங்களுக்கும், அவற்றின் சிறப்பிற்கு ஏற்ப, தனித்தனி 'லோகோ' சின்னம் உள்ளது. மாமல்லபுரத்தின் சிறப்பு கருதி, பாரம்பரிய கலைச்சின்னமான கடற்கரை கோவில் இடம்பெற்ற 'லோகோ' சின்னம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.