/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்பதி பிரம்மோத்சவ விழாவில் ஆளவந்தார் அறக்கட்டளை சேவை
/
திருப்பதி பிரம்மோத்சவ விழாவில் ஆளவந்தார் அறக்கட்டளை சேவை
திருப்பதி பிரம்மோத்சவ விழாவில் ஆளவந்தார் அறக்கட்டளை சேவை
திருப்பதி பிரம்மோத்சவ விழாவில் ஆளவந்தார் அறக்கட்டளை சேவை
ADDED : செப் 23, 2025 10:39 PM
மாமல்லபுரம்:திருப்பதி பிரம்மோத்சவ விழாவில், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகத்தினர், அக்., 1ம் தேதி வரை, நாலாயிர திவ்ய பிரபந்த சேவையாற்றி, அன்ன தானம் வழங்குகின்றனர்.
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது.
அதற்கு சொந்தமாக, மாமல்லபுரம் - வடநெம்மேலி இடையே உள்ள கடலோர இடங்களில், 1,054 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த நுாற்றாண்டில் வாழ்ந்த நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தாருக்குச் சொந்தமான நிலமே, தற்போது அறநிலையத்துறை அறக்கட்டளைக்கு உரியதாக உள்ளது.
திருமணமாகாத அவர், வைணவ ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, தன் சொத்துகள் வாயிலாக கிடைத்த வருவாயை ஆன்மிக, அறச்செயல் களுக்கு பயன்படுத்தினார்.
மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள், திரு விடந்தை நித்ய கல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களில், உத்சவங்கள் நடத்தி அன்னதானம் வழங்குமாறு, உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அறக்கட்டளை நிர்வாகம், அவ்வாறே செயல் படுத்தி வருகிறது.
அதன்படி, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோத்சவ விழாவில், அறக்கட்டளை நிர்வாகம் சேவையாற்றும்.
138ம் ஆண்டாக, செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள், மாமல்லபுரம் சுற்றுப்புற பாகவதர் குழுவினர் திருப்பதி சென்றுள்ளனர்.
நேற்று துவங்கி, அக்., 1ம் தேதி வரை, தினமும் காலை சிறப்பு வழிபாடு நடத்தி, நாலாயிர திவ்ய பிரபந்த சேவையாற்றி, பாசுர பாடல்கள் பாடுகின்றனர்.
தினமும் மூன்று வேளை அன்னதானம் வழங்கி, உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக, அறக் கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.