/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்
/
மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்
மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்
மயானத்திற்கு பாதை வசதி கேட்டு அபிராமிபுரம் கிராம மக்கள் மறியல்
PUBLISHED ON : நவ 16, 2025 01:51 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அபிராமிபுரம் கிராமத்தில், மயானத்திற்கு செல்ல பாதை வசதி கேட்டு, கிராம மக்கள் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அபிராமிபுரம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, கிராமத்தின் அருகே மயானம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், மயானத்திற்குச் செல்ல உரிய பாதை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக, தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியே, உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
தற்போது, அந்த தனியார் நிலத்தின் உரிமையாளர், நிலத்தை விற்பனை செய்த நிலையில், அங்கு வீட்டு மனைகள் ஏற்படுத்தப்பட்டு, சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று, அபிராமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர், கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர்.
இதில், சுமுக முடிவு எட்டப்பட்டதால், மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

