ADDED : அக் 29, 2025 10:56 PM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் கண்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தனி சன்னிதியில் முருகப்பெருமான் ஆறுமுக சுவாமியாக வீற்று அருள்பாலிக்கிறார்.
கந்தசஷ்டியை முன்னிட்டு, மூலவர் ஆறுமுக சுவாமிக்கு, கடந்த 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடு, இறுதி நாளில் ஏகதின சகஸ்ரநாம லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன.
நேற்று முன்தினம் அவருக்கு சந்தனக்காப்பு சாற்றியும், நேற்று காலை பாலாபிஷேகம் செய்தும் கந்த சஷ்டி உத்சவம் நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள், முருகப் பெருமானை வழிபட்டனர்.
இதேபோல, மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி உத்சவ நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

