/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை வசதியின்றி இருளர் குடும்பத்தினர் தவிப்பு
/
சாலை வசதியின்றி இருளர் குடும்பத்தினர் தவிப்பு
ADDED : அக் 29, 2025 10:55 PM

திருப்போரூர்: கரும்பாக்கம் ஊராட்சியில் சாலை மற்றும் வடிகால்வாய் வசதியின்றி, இருளர் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சியில், இருளர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் முறையான வடிகால்வாய் வசதியில்லாததால், அங்குள்ள குளத்தில் நிரம்பும் மழைநீர், மற்ற பகுதி மழைநீர் சேர்ந்து, இருளர் பகுதியில் சாலையோரம் வழிந்தோடுகிறது.
இப்பகுதியில், புதிதாக சாலையும் அமைக்கப்படாததால், சகதியாக உள்ளது.
அத்துடன் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் வசிப்போர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை இல்லை என மக்கள் வேதனைப்படுகின்றனர்.
அதேபோல் மழைநீர், கழிவுநீர் இரண்டும் கலந்து, பூயிலுப்பை அம்பேத்கர் தெரு வழியாக செல்வதால், அப்பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன், மழைநீரும் கழிவுநீரும் சாலையில் தேங்குவதால் பாசி படர்ந்து, சாலையில் நடந்து செல்வோர் வழுக்கி கீழே விழுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இருளர் பகுதியில் சாலை அமைக்கவும், மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வடிகால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

