/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகர பேருந்துகளால் அதிகரிக்கும் விபத்துகள் தனிப்பாதை உருவாக்கி இயக்க சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் பரிந்துரை
/
மாநகர பேருந்துகளால் அதிகரிக்கும் விபத்துகள் தனிப்பாதை உருவாக்கி இயக்க சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் பரிந்துரை
மாநகர பேருந்துகளால் அதிகரிக்கும் விபத்துகள் தனிப்பாதை உருவாக்கி இயக்க சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் பரிந்துரை
மாநகர பேருந்துகளால் அதிகரிக்கும் விபத்துகள் தனிப்பாதை உருவாக்கி இயக்க சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் பரிந்துரை
ADDED : மார் 07, 2024 12:47 AM
சென்னை:மாநகர போக்குவரத்து கழகத்தில் நடக்கும் விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான தீர்வு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கீதகிருஷ்ணன் தலைமையிலான ஆறு பேர் குழுவினர், ஆறு மாதங்களாக பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மொத்தம் 100 பக்கங்கள் உடைய ஆய்வு அறிக்கை, சென்னை ஐ.ஐ.டி.,யில் வெளியிடப்பட்டது.
மாநகர பேருந்துகள் விபத்துகளில் சிக்குவதற்கான காரணங்கள், அதிக விபத்து நடக்கும் வழித்தடங்கள், விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கீதகிருஷ்ணன் கூறியதாவது:
மாநகர பேருந்து விபத்துகளுக்கு மோசமான சாலை, தொழில்நுட்ப கோளாறு, ஓட்டுனர்களின் கவனக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வுக்கு, 'ரெனால்ட் நிசான் டெக்னாலஜி' நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி உதவியாக இருந்தது.
மொத்தம் 500 மாநகர பேருந்து ஓட்டுனர்களிடம் ஆய்வு நடத்தினோம். தவிர, 200 மாநகர பேருந்துகளில் பிரத்யேக 'சிப்' பொருத்தியும், 'சிமுலேட்டர்' எனும் 'மாதிரி ஓட்டுனர் கூடத்தில்' 200 ஓட்டுனர்களை இயக்க வைத்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேருந்து ஓட்டுனர்கள், இரவு ஷிப்டுகளில் கூடுதலாக பணியாற்றுவது, இரண்டு ஷிப்டுகளை தொடர்ச்சியாக பார்ப்பது ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகளவில் நடந்துள்ளது.
அதேபோல் கோபம், பதற்றமாக இருக்கும் ஓட்டுனர்கள், பேருந்துகளை வேகமாக செலுத்துவது, திடீரென பிரேக் போட்டு ஓட்டுவது போன்ற அதிக அதிர்வுகளோடு செலுத்துவதாலும் விபத்துகள் நடந்துள்ளன.
முக்கியமாக, மாநகர பேருந்து இயக்க நேர அட்டவணை, பல ஆண்டுகள் பழமையானது. இந்த கால அட்டணை, சென்னையில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு சரியாக இல்லை.
ஓட்டுனர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். பல மடங்கு வாகன பெருக்கம், மெட்ரோ உள்ளிட்ட திட்டப்பணிகளாலும் நெரிசல் அதிகரித்துள்ளது.
எனவே, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றார்போல், பேருந்து இயக்க கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.
அதேபோல், பேருந்துகளுக்கென என தனிப்பாதை உருவாக்கி, அதில் பேருந்துகளின் சேவையை அதிகரிக்க வேண்டும்.
இந்த அறிக்கையை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

