/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை - கடற்கரை தடத்தில் கூடுதல் ரயில்கள் அவசியம்: 'பீக் ஹவர்ஸ்'சில் மூச்சுத்திணறி பயணியர் தவிப்பு
/
செங்கை - கடற்கரை தடத்தில் கூடுதல் ரயில்கள் அவசியம்: 'பீக் ஹவர்ஸ்'சில் மூச்சுத்திணறி பயணியர் தவிப்பு
செங்கை - கடற்கரை தடத்தில் கூடுதல் ரயில்கள் அவசியம்: 'பீக் ஹவர்ஸ்'சில் மூச்சுத்திணறி பயணியர் தவிப்பு
செங்கை - கடற்கரை தடத்தில் கூடுதல் ரயில்கள் அவசியம்: 'பீக் ஹவர்ஸ்'சில் மூச்சுத்திணறி பயணியர் தவிப்பு
UPDATED : மே 26, 2025 07:41 AM
ADDED : மே 26, 2025 12:51 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - சென்னை- கடற்கரை இடையிலான புறநகர் மின்சார ரயில்களில், நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கித் திணறி வருகின்றனர். இதனால், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. எட்டு ஒன்றியங்கள் உள்ளன.
தனியார் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள், தனியார் குடியிருப்புகள் என, சென்னை மாநகருக்கு இணையாக, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இம் மாவட்டத்தில், தற்போது 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கல்வி, பணி, தொழில், மருத்துவம் மற்றும் இதர தேவைக்காக, தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து சென்னையின் பல இடங்களுக்கு பயணிக்கின்றனர்.
இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக குடியேறுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அத்துடன், பேருந்து கட்டணத்தை ஒப்பிடுகையில், கட்டணம் மிகக் குறைவாக உள்ளதால், பெரும்பாலானோர் ரயில் பயணத்தை நாடுகின்றனர். இதன் காரணமாக, ரயில் பயணியர் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது.
ஆனால், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை எண்ணிக்கை, போதுமானதாக இல்லை.
இதனால் ரயில் பயணியர், 'பீக் - ஹவர்ஸ்'சில் கடும் கூட்ட நெரிசலில், தொங்கியபடி பயணிக்கும் சூழல் உள்ளது.
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், முதியோர், வேலைக்குச் செல்லும் பெண்கள், இந்த கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.எனவே, செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை மார்க்கத்தில், அதிக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:
செங்கல்பட்டு முதல் தாம்பரம் இடையே பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் ஆகிய ஒன்பது ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த ஒன்பது ரயில் நிலையங்களுக்கு அருகில், 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிப்போரும் இந்த ரயில் நிலையங்களையே பயன்படுத்துவதால், ஒரு நாளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், இங்கிருந்து ரயில்களில் பயணிக்கின்றனர்.
தவிர, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வருவதற்காக, புறநகர் ரயிலில் பயணித்து, வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது, செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு, வார நாட்களில் தினமும் 42 ரயில் சேவைகள் உள்ளன. ஒரு ரயிலில் சராசரியாக 2,500 நபர்கள் பயணித்தாலும் போக்கு, வரத்து என்ற முறையில், தினமும் இரண்டு லட்சம் நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
ஆனால், பயணியர் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் மேல் உள்ளது. பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்சார ரயில் சேவை இல்லாததால், கூட்டம் முண்டியடிக்கிறது.
குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளையில், 'பீக் -- ஹவர்ஸ்' எனும் துரித நேரங்களில், கூட்டத்தில் சிக்கி, மூச்சுத் திணறலோடு பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை மார்க்கத்தில், கூடுதல் எண்ணிக்கையில் ரயில்களை இயக்க வேண்டும். தவிர, செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை இயங்கக்கூடிய 'கட் சர்வீஸ்' ரயில் சேவைகளையும் துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.