/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கதவு எண் மாற்றத்தால் முகவரி குழப்பம் எஸ்.ஐ.ஆர்., பணி ஊழியர்கள் திணறல்
/
கதவு எண் மாற்றத்தால் முகவரி குழப்பம் எஸ்.ஐ.ஆர்., பணி ஊழியர்கள் திணறல்
கதவு எண் மாற்றத்தால் முகவரி குழப்பம் எஸ்.ஐ.ஆர்., பணி ஊழியர்கள் திணறல்
கதவு எண் மாற்றத்தால் முகவரி குழப்பம் எஸ்.ஐ.ஆர்., பணி ஊழியர்கள் திணறல்
ADDED : நவ 12, 2025 10:40 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊராட்சிகள்தோறும் வீடுகளுக்கான கதவு எண்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் சிறப்பு தீவிர நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், சரியான முகவரியைக் கண்டுபிடித்து, படிவம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகளில், 636 கிராமங்கள் உள்ளன. தவிர, தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன.
மேலும் அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஆறு பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகளின் கீழ் உள்ளன.
மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில் கடந்தாண்டு, ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு புதிய கதவு எண் வழங்கப்பட்டது.
ஆனால், புதிய கதவு எண் மாற்றம் குறித்த விழிப்புணர்வை, ஊராட்சி நிர்வாகங்கள் மக்களுக்கு அளிக்கவில்லை.
இதனால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை வீட்டின் புதிய எண்ணிற்கு மாற்றாமல், பழைய எண்ணையே பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, வாக்காளர் சிறப்பு தீவிர பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், வீடுகள்தோறும் வாக்காளர் படிவங்களை வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அப்போது, வாக்காளர் படிவத்தில் உள்ள வீட்டின் கதவு எண்ணும், வீட்டின் முகப்பில் எழுதப்பட்டுள்ள கதவு எண்ணும் வேறு வேறாக இருப்பதால், சரியான முகவரியை கண்டுபிடித்து படிவங்களை வழங்குவதில் குழப்பம், கால விரயம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தி ல் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்க, 2,826 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு ஊழியரும் நாள் ஒன்றிற்கு, 50 வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பணி துவக்கப்பட்டு, வரும் டிச., 4ம் தேதி முடிவு பெறுகிறது.
கடந்த 2005க்கு பின், வாக்காளர் சிறப்பு தீவிர நடவடிக்கை பணிகள், தமிழகத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளில், ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு புதிய கதவு எண்கள் வழங்கப்பட்டுள்ளது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் படிவத்தில், வீட்டின் பழைய கதவு எண்கள் உள்ளன. வாக்காளர்கள் வசிக்கும் வீடுகளில் புதிய எண்கள் உள்ளன.
பல தெருக்களில், இந்த வேறுபாடு பெரும் குழப்பத்தை தருவதால், சரியான வாக்காளர்களை கண்டறிந்து, படிவங்களை வழங்குவதில் குழப்பம், கால விரயம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

