/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை கொட்டும் இடமான அடையாறு ஆறு 'ஜீரோ பாயின்ட்'
/
குப்பை கொட்டும் இடமான அடையாறு ஆறு 'ஜீரோ பாயின்ட்'
ADDED : நவ 10, 2025 11:14 PM

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே ஆதனுாரில், அடையாறு ஆறு துவங்கும் இடத்தில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே, ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்துார், கவுல்பஜார் வழியாக சென்று, பட்டினப்பாக்கம் அருகே, கடலில் கலக்கிறது.
இதில், பல்வேறு இடங்களில் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், அதிக மழை பெய்யும் போது, அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்து பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில், ஆதனுாரில் உள்ள 'ஜீரோ பாயின்ட்' எனப்படும், அடையாறு ஆறு துவங்கும் இடத்தில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பை, ஆற்றில் கொட்டப்பட்டு வருகிறது.
அதேபோல் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், ஆதனுார் பகுதிகளில் இயங்கிவரும் இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை, ஆற்றில் கொட்டுகின்றனர்.
இதனால், அடையாறு ஆறு துவங்கும் இடம், நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது.
எனவே, அடையாறு ஆறு மற்றும் கரைகளில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

