/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு... ரூ. 140 கோடி செங்கல்பட்டில் 10,516 விவசாயிகள் பயன்
/
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு... ரூ. 140 கோடி செங்கல்பட்டில் 10,516 விவசாயிகள் பயன்
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு... ரூ. 140 கோடி செங்கல்பட்டில் 10,516 விவசாயிகள் பயன்
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு... ரூ. 140 கோடி செங்கல்பட்டில் 10,516 விவசாயிகள் பயன்
UPDATED : ஜன 16, 2025 02:20 AM
ADDED : ஜன 16, 2025 12:21 AM

செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் வாயிலாக,விவசாயிகளுக்கு கடன் வழங்க, 140 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 10,516 விவசாயிகளுக்கு, 85 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு வட்டி இல்லாமல், விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், செங்கல்பட்டு மாவட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 20 கிளைகள், 89 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மூன்று கூட்டுறவு நகர வங்கிகள், 11 நகர கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன.
இவை அனைத்தும், செங்கல்பட்டு மாவட்ட இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயம் செய்யப்படுகிறது. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகா பகுதிகளில், விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது.
பாலாற்று பகுதியில் உள்ளவர்கள் ஆழ்துளை கிணறு, கிணற்று நீர் மற்றும் ஏரி பாசனம் வாயிலாக சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவம் ஆகிய மூன்று பருவங்களில், நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி கரும்பு, மணிலா, கொடி வகை பயிர்களான தர்ப்பூசணி உள்ளிட்டவையும் சாகுபடி செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022 - 23ம் ஆண்டு, விவசாய பயிர்க்கடனாக 100 கோடி ரூபாய் வழங்க, கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்தது.
இந்த இலக்கை தாண்டி, 105.65 கோடி ரூபாய், 14,790 விவசாயிகளுக்கு கடன் உதவியாக வழங்கப்பட்டது.
2023 - 24ல் பயிர் கடனாக, 125 கோடி ரூபாய் வழங்க, கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்தது. இதில், 115 கோடி ரூபாய் வழங்கியதில், 13,692 விவசாயிகள் கடன் உதவி பெற்றனர்.
மாவட்டத்தில், சில மாதங்களாக பெய்த மழையில், ஆழ்துளை கிணறு, கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏரிகளிலும் நீர் நிரம்பி உள்ளது. இதனால், நெல் சாகுபடி துவங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, 2024 - 25ம் ஆண்டுக்கு, பயிர்க் கடனாக 140 கோடி ரூபாய் வழங்க கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்தது. அதன்படி கடந்த ஏப்., மாதத்தில் இருந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கி வருகின்றனர்.
இதில், 85 கோடி ரூபாய் வரை, 10,516 விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் பணி, முழு வீச்சில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனால், சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை, கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் ஆகியவற்றை வங்கி, கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களில் அளித்து கடனுதவி பெறலாம் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன், கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களில் வழங்கி வருகிறோம். விவசாயிகள் பெறும் கடனை, ஓராண்டுக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை. அதன் பிறகு, வட்டியுடன் சேர்த்து, கடன் தொகையை செலுத்த வேண்டும். தகுந்த ஆவணங்களுடன் வங்கிகளுக்கு சென்று, விவசாயிகள் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
- வே.நந்தகுமார்,
கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர்,
செங்கல்பட்டு மாவட்டம்.