/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்புகளால் குறுகிய ஆலம்பரைகுப்பம் சாலை
/
ஆக்கிரமிப்புகளால் குறுகிய ஆலம்பரைகுப்பம் சாலை
ADDED : பிப் 14, 2024 10:18 PM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், ஆலம்பரைகுப்பத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது. இதன் அகலம், 3.5 மீட்டர், நீளம் 3 கி.மீ., ஆகும்.
கடப்பாக்கம்குப்பம், ஆலம்பரை தண்டுமாரியம்மன் குப்பம், ஆலம்பரை ஊத்துக்காட்டு அம்மன் குப்பம் போன்ற மூன்று கிராம மக்களின் பிரதான சாலை ஆகும்.
இப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், நுாலகம், அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், மருத்துவமனை, மீன் மார்க்கெட், பெட்ரோல் பங்க், துணை மின் நிலையம், வங்கி போன்றவை செயல்படுகின்றன. இதனால், தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
மேலும், ஆலம்பரைகுப்பத்தில் உள்ள ஆலம்பரைகோட்டையை சுற்றி பார்க்க, சுற்றுலாப் பயணியரும் வந்து செல்கின்றனர்.
தற்போது உள்ள சாலை, 10 அடி அகலம் மட்டுமே உள்ளதால், கார், வேன், பேருந்து ஆகியவை சென்று வர கடினமாக உள்ளது.
இரண்டு கனரக வாகனங்கள் எதிர் எதிரே சென்றால், கடந்து செல்ல போதிய இடவசதி இல்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயற்சி செய்யும் போது, அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயராமன் என்பவர் கூறியதாவது:
கடப்பாக்கத்தில் இருந்து ஆலம்பரைகுப்பத்திற்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சுமார் 25 அடி சாலைக்கு சொந்தமான இடம் உள்ளது. 10 அடியில் மட்டுமே சாலை உள்ளது.
மீதம் உள்ள இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. சாலையை விரிவுபடுத்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். தற்போது வரை நடவடிக்கை இல்லை.
கடந்த ஆண்டு ஆக., மாதம், மதுராந்தகம் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலனை செய்ய, அக்., மாதம் செய்யூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின், நவ., மாதம் மனு குறித்து நடவடிக்கை எடுக்க, கடப்பாக்கம் ஆர்.ஐ.,க்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், வருவாய் துறையினர் அலட்சியம் காட்டுவதால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

