/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாக்கம் ஏரி கரையில் தரமற்ற சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு
/
பாக்கம் ஏரி கரையில் தரமற்ற சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு
பாக்கம் ஏரி கரையில் தரமற்ற சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு
பாக்கம் ஏரி கரையில் தரமற்ற சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 29, 2025 12:47 AM

மதுராந்தகம்:-பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரிக்கரையின் மீது தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, மதுராந்தகம் பாசன பிரிவுக்கு சொந்தமான, 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் பாசன நீரை பயன்படுத்தி, ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஏரிக்கரையின் சாலையை, வயலுார், தாதங்குப்பம், புளிக்கொரடு, வசந்தவாடி, முதுகரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்கள், விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை ஏரிக்கரை வழியாக கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக, ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்ககோரி, இப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதன் தொடர்சியாக, பெரிய ஏரிக்கரையின் மீது, 1,500 மீட்டர் நீளத்திற்கு, 2022-ல் சாலை அமைப்பதற்காக 1.90 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக, 1.34 கோடி ரூபாய் மதிப்பீடு தொகை போடப்பட்டது.
அதையும் ரத்து செய்து, மூன்றாவது முறையாக, 49 லட்சம் ரூபாய் மதிப்பீடு போடப்பட்டு, ஊராட்சி மன்ற தலைவரின் கட்டுப்பாட்டில், அவர்களின் விருப்பத்தின் பேரில் சாலை அமைக்கும் பணி மேற்கொண்டு வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலையின் அளவை விட குறைவாக பணி மேற்கொள்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். பாக்கம் ஏரிக்கரையின் மீது, 15 அடி அகலம் சாலை அமைக்க மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், 10 அடி அகலத்திற்கு சாலை அமைக்க எம். சான்ட் கலந்த ஜல்லி கலவை கொட்டப்பட்டு, முதற்கட்ட பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும், பாசனப்பிரிவு அலுவலகத்தின் வாயிலாக, ஏரிக்கரை பகுதியில் அலை தாங்கி கற்களும், தடுப்பு சுவரும் அமைத்தல், ஏரிக்கரையின் மீது மண் கொட்டி கரை உயர்த்துதல் உள்ளிட்ட 11 நிபந்தனைகளையும், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை, பின்பற்றாமல் சாலை பணி மேற்கொள்ளப்படுவதாக, தாதங்குப்பம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பாக்கம் ஏரி கரையின் மீது அமைக்கப்படும் சாலை பணியை கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.