ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கேள்வி
ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கேள்வி
ADDED : டிச 12, 2025 05:02 AM

சென்னை: 'பொது சமையலறை திட்டத்தின் கீழ் எழும் புகார்களை, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பூசி, மெழுகி, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசுவது, இத்துறை யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது' என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி, கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒப்புதல் அவரது அறிக்கை:
ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சென்னையில் செயல்படும், 28 விடுதிகளில் படிக்கும், 3,500க்கும் அதிகமான மாணவர்களுக்கு, பொது சமையல் அறை திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது.
இம்முறையில் வெளிப்படைத் தன்மையின்றி, 'டெண்டர்' கோரப் படாமல், நேரடியாக ஆந்திராவை சேர்ந்த, 'ஸ்ரீ ஹரி என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திற்கு, அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
இந்நிறுவனம், அரசு நிர்ணயித்துள்ள உணவு பட்டியலின் கீழ் உணவு தயாரிக்காமல், ஹிந்தி பேசும் சமையலர்கள் வைத்து, இரண்டு இடங்களில் உணவு சமைத்து, மாணவர் களுக்கு விநியோகம் செய்கிறது.
இத்திட்டத்தின் படி, தினசரி வருகைப் பதிவேட்டில், ஒரு மாணவருக்கு கூட, விடுப்பு அளிக்காமல், விடுதியில் அனுமதிக்கப்பட்ட, மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவு கட்டணம், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் வழியே, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
உணவு கட்டணம் இதில் விடுமுறை நாட்கள், மாணவர்கள் விடுதியில் தங்காத நாட்களும் சேர்க்கப்பட்டு, உணவு கட்டணம் வழங்கப் படுகிறது.
மேலும், தினசரி உணவு தரமாக உள்ளதாகவும், போதுமான அளவு வழங்கப்படுவதாகவும், அமுத சுரபி இணையதளத்தில் பதிவேற்றும்படி, விடுதி காப்பாளர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.
அதேபோல், வருகைப் பதிவேட்டில், மாணவர்கள் தினசரி விடுதியில் தங்கி, உணவு அருந்துவதாக, பதிவு செய்ய வேண்டும் என, விடுதி காப்பாளர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதேபோல், உணவின் தரம் குறித்து, மாணவர்கள் பல்வேறு புகார்களை, அடுக்கி வருகின்றனர்.
ஆனால், துறை செயலர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், புகார்கள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பூசி, மெழுகி வருவது, இத்துறை யாருக்கானது என்ற, கேள்வியை எழுப்புகிறது.
எனவே, அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ மீதான புகார்கள் மற்றும் விமர்சனங்களை, எளிதாக கடந்து சொல்லாமல், கூர்ந்து கவனித்து, துறையை பாழ்படுத்தி வரும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

