/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அரசியல் கட்சிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு
/
செங்கையில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அரசியல் கட்சிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு
செங்கையில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அரசியல் கட்சிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு
செங்கையில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அரசியல் கட்சிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு
ADDED : மார் 20, 2025 01:40 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலையில், தேசிய நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடம், அரசியல் கட்சிகள் துணையோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை மீட்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் இருபுறமும், அணுகுசாலைகள் உள்ளது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள், மேம்பாலத்தின் கீழுள்ள அணுகுசாலையில் நின்று செல்கின்றன.
இதேபோன்று, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளும், அணுகுசாலையில் நின்று செல்கின்றன.
இந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதில், சென்னை செல்லும் தடத்தில் அணுகுசாலையில், தேசிய நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அரசியல் கட்சி போர்வையில், கடைகள் கட்டி உள்ளனர். இந்த வகையில் இருபுறமும் அணுகுசாலையில், 10க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
மேலும், மேம்பாலம், அணுகுசாலைகளில், ஆட்டோக்களை தறுமாறாக நிறுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மகேந்திரா வேர்ல்டு சிட்டி தனியார் நிறுவனம், பயணியர் அமர்வதற்கு நிழற்குடை மற்றும் மேம்பாலம் உட்பகுதியில், புறக்காவல் நிலையம் அமைத்துக் கொடுத்தது.
இதை பராமரிப்பதில் போலீசார் அலட்சியம் கட்டியதால், சீரழிந்து வருகிறது. இங்குள்ள பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து பயணியர் சாலையில் விபத்து அச்சத்துடன் நின்று பயணம் செய்கின்றனர். அரசியல் கட்சியினர் இங்குள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, கட்சி கொடி கம்பங்கள் நட்டு, பெரிய அளவில் மேடை கட்டியுள்ளனர்.
இவற்றை அனுமதித்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெரிய அளவில் கொடி கம்பம் அமைக்கும் சூழல் உள்ளது.
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான இடங்களை மீட்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணுகுசாலையை ஆக்கிரமித்து ஏராளமான நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஒரு சிலர் சாலை ஓரங்களில் தற்காலிக கொட்டகை அமைத்து, அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆசியோடு, உள் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். காவல் துறை, நகராட்சி அலுவலர்கள் தங்களது அன்றாட லாபத்திற்காக, ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல கோடி ரூபாய் செலவு செய்து அகலப்படுத்தப்பட்ட இந்த சாலை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- தேவ்.பாண்டே,
சமூக ஆர்வலர்,
செங்கல்பட்டு.
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் இருந்து பொதுமக்கள், தனியார் நிறுவன தொழிலாளர்கள் நலன் கருதி, செங்கல்பட்டு நகருக்கு காலை, பிற்பகல், இரவு நேரங்களில் சென்று வர, 'கட் சர்வீஸ்' பேருந்துகள் இயக்க வேண்டும்.
- ரஞ்சிதா சோழன்,
செங்கல்பட்டு.