ADDED : செப் 14, 2025 10:27 PM
மறைமலை நகர்:அனுமந்தபுரம் சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளத்தை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சீரமைத்தனர்.
சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தங்களின் அடிப்படை தேவைகளுக்குகாக சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் கொண்டங்கலம், தென்மேல்பாக்கம், அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளதால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
வனத்துறை இடையூறு காரணமாக சாலை சீரமைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை பார்த்த கொண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சொந்த செலவில் சாலையில் பல்வேறு இடங்களில் இருந்த பள்ளங்களில் மண் கொட்டி சமன் செய்து சீரமைத்தனர்.