/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகஸ்தீஷ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா விமரிசை
/
அகஸ்தீஷ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா விமரிசை
ADDED : ஜன 13, 2025 11:39 PM

சூணாம்பேடு, சூணாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தில், பழமையான மூகாம்பிகை உடனுறை அகஸ்தீஷ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள், விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று மார்கழி ஆருத்ரா பூஜையை ஒட்டி பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜ மூர்த்திக்கு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், வில்லிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
l திருக்கழுக்குன்றத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்றது.
சைவ சமய குரவர்கள் நால்வரில், மாணிக்கவாசகர் குறிப்பிடத்தக்கவர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை போற்றிப் பாடியுள்ள இவர், இக்கோவிலில் தனி சன்னிதியில் வீற்றுள்ளார்.
நடராஜர் ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, இவருக்கும் 10 நாட்கள் மார்கழி உற்சவம் நடைபெறும்.
இந்த உற்சவம் மாணிக்கவாசகர் மூலவர், உற்சவர் ஆகியோருக்கு, ஜன., 4ம் தேதி, சிறப்பு அபிஷேக வழிபாடு, வீதியுலா ஆகியவற்றுடன் துவங்கியது.
ஒன்பது நாட்களாக, தினசரி உற்சவம் கண்டார்.
ஆருத்ரா தரிசன நாளான நேற்று காலை நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது.
மூவரும் வீதியுலா சென்று நடராஜர், ரிஷப தீர்த்த குளத்தில் நீராடினார். பின் நடராஜர், சிவகாமி திருவூடல் நிகழ்வு நடைபெற்று, மாணிக்கவாசகர் அவர்களை சமாதானம் செய்து, உற்சவம் நிறைவு பெற்றது.
மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதி சிவபெருமான் கோவில்களிலும், ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது.
l மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மார்கழி மாத பவுர்ணமி விழா வெகு விமரிசையாக நடந்தது.
மக்கள் சுபிஷமுடன் வாழ, ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.