/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அஷ்டலட்சுமி கோவிலில் பாலாலயம் ரூ.2 கோடியில் திருப்பணி
/
அஷ்டலட்சுமி கோவிலில் பாலாலயம் ரூ.2 கோடியில் திருப்பணி
அஷ்டலட்சுமி கோவிலில் பாலாலயம் ரூ.2 கோடியில் திருப்பணி
அஷ்டலட்சுமி கோவிலில் பாலாலயம் ரூ.2 கோடியில் திருப்பணி
ADDED : ஜன 20, 2025 11:42 PM

சென்னை,அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், சன்னிதிகளில் திருப்பணி மேற்கொள்ள பாலாலயம் செய்யப்பட்டது.
சென்னை, பெசன்ட் நகரில், வங்க கடற்கரையோரம் அமைந்துள்ளது அஷ்டலட்சுமி கோவில். கட்டட கலையில் சிறப்பு அம்சம் பொருந்திய, அஷ்டாங்க விமானத்தில் அமைந்துள்ளது.
கடந்த, 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆண்டு பிப்.,15ல், விமானங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவக்கப்பட்டன.
இதில், அஷ்டாங்க விமானம் புதுப்பித்தல், கோவில் தரைதளம் அமைத்தல், முழுதும் மின் இணைப்பு புதுப்பித்தல், மடப்பள்ளி, அன்னதானம் கூடம் சீரமைப்பு ஆகிய திருப்பணிகள், 2 கோடி ரூபாயில், உபயதார்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவில் சன்னிதிகளில் திருப்பணி மேற்கொள்ளும் வகையில், அனைத்து சன்னிதி மூலவர் திருமேனிகளை, அத்திமரத்தில் படமாக வரைந்து, ஆவாகனம் செய்து, ஹோமம் வளர்த்து, மூன்று கால பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம் நடக்கும் வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள், மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மூலவர் திருமேனிகளையும், உற்சவ மூர்த்திகளையும் தரிசனம் செய்யலாம்.
சன்னிதிகளின் திருப்பணி முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

