/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரவு பணியில் ஈடுபட்ட துப்புரவாளர்கள் மீது தாக்குதல்: மூவர் மருத்துவமனையில் அனுமதி
/
இரவு பணியில் ஈடுபட்ட துப்புரவாளர்கள் மீது தாக்குதல்: மூவர் மருத்துவமனையில் அனுமதி
இரவு பணியில் ஈடுபட்ட துப்புரவாளர்கள் மீது தாக்குதல்: மூவர் மருத்துவமனையில் அனுமதி
இரவு பணியில் ஈடுபட்ட துப்புரவாளர்கள் மீது தாக்குதல்: மூவர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : அக் 19, 2024 01:35 AM
பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில், குப்பை சேகரிக்கும் பணியை, 'அவர் லேண்ட்' என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதன் பல்லாவரம் மண்டல ஊழியர்களான பல்லாவரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், 46, மூர்த்தி, 47, பிரான்சிஸ், 46, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 1:00 மணிக்கு, பான்ட்ஸ் சிக்னல் மேம்பாலம் ஏறும் இடத்தில், இடதுபுறம், 'டாஸ்மாக்' கடை வாசலில் தேங்கிய குப்பையை அள்ள, ஓரிடத்தில் குவித்து வைத்தனர். அப்போது, அங்கு வந்த கார் ஒன்று, குப்பை மீது நின்றுள்ளது.
இதை பார்த்த துாய்மை பணியாளர்கள், காரை எடுத்தால் குப்பை சேகரிக்க வசதியாக இருக்கும் என கூறியுள்ளனர்.
அப்போது, டாஸ்மாக் கடையில் இருந்து போதையில் வெளியே வந்த நபர், 'என் காரை யாருடா தட்டுறது' என கேட்டு, குப்பை சேகரிக்கும் லோடு ஆட்டோ ஓட்டுனர் ஆரோக்கியராஜை தாக்கியுள்ளார்.
இதற்கிடையில், சக பணியாளர்கள் மற்றும் அங்கிருந்தோர் சமாதானம் செய்து, இரு தரப்பினரையும் அனுப்பினர்.
சிறிது நேரம் கழித்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த எட்டு பேர் கும்பல், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால், மூன்று துாய்மை பணியாளர்களையும் சரமாரியாக தாக்கினர்.
இதில், ஓட்டுனர் ஆரோக்கியராஜின் இடது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிரான்சிஸ், மூர்த்தி ஆகிய இருவருக்கும் தோல்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
மூவரும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், துாய்மை பணியாளர்களை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்தனர்.
பல்லாவரம் மேம்பாலம் ஏறும் இடத்தில், இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், 24 மணி நேரமும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மற்றொரு புறம், இந்த கடைக்கு வரும் குடிமகன்கள், வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், அங்கு தினமும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, கைகலப்புக்கும் காரணமாகி உள்ளது. கடைகளை இங்கிருந்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.