/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் விற்பனை செய்த 372 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
/
போதை பொருள் விற்பனை செய்த 372 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
போதை பொருள் விற்பனை செய்த 372 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
போதை பொருள் விற்பனை செய்த 372 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
ADDED : நவ 22, 2025 01:35 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த வழக்கில், 372 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அதிக அளவில் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இதை கண்காணிக்க கல்வித்துறை, போலீஸ், உணவு பாதுகாப்புத்துறை ஆகியோர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் கடைகளுக்குச் சென்று, போதைப் பொருட்கள் விற்பனை செய்தால், கடைக்கு 'சீல்' வைத்து, உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பர்.
இதுமட்டுமின்றி, செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து, கட்டுப்படுத்த வேண்டும் என, எஸ்.பி., சாய் பிரணித் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை கண்காணிக்கும் போலீசார், வாகன சோதனைகளும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, கஞ்சா விற்பனை தொடர்பாக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகளில், 330 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 366 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அதன் பின், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
அத்துடன், குற்ற செயல்களில் ஈடுபட்ட வகையில், 130 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குட்கா விற்பனை தொடர்பாக, 426 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 461 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3,965 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். இதில், 242 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
மொத்தமாக, மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை செய்த 372 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

