/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார் துணை மின் நிலையம் முற்றுகை பழைய மின் கம்பிகளை மாற்றக்கோரி மனு
/
ஆலத்துார் துணை மின் நிலையம் முற்றுகை பழைய மின் கம்பிகளை மாற்றக்கோரி மனு
ஆலத்துார் துணை மின் நிலையம் முற்றுகை பழைய மின் கம்பிகளை மாற்றக்கோரி மனு
ஆலத்துார் துணை மின் நிலையம் முற்றுகை பழைய மின் கம்பிகளை மாற்றக்கோரி மனு
ADDED : அக் 15, 2024 02:10 AM
திருப்போரூர், அக். 15--
திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் அடங்கிய 8 வார்டுகளில், தண்டலம், பூந்தண்டலம், மேட்டுத்தண்டலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, 5,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிகக் கடைகள், புதிய மனை பிரிவுகள் உள்ளன.
இதில், ஊராட்சியின் துணை கிராமமான தண்டலம் கிராமம் ஒரு பகுதி, பூந்தண்டலம், பள்ளத்தண்டலம் உள்ளிட்ட பகுதிகள், ஆலத்துார் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளன.
அதேபோல், தண்டலம் கிராமத்தின் ஒரு பகுதி, மேட்டுத்தண்டலம் உள்ளிட்ட பகுதிகள், திருப்போரூர் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், ஆலத்துார் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கிராம பகுதிகளில் அமைக்கப்பட்ட மின் கம்பம், மின் கம்பிகள், 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.
இதில், பெரும்பான்மையானவை, ஆலத்துாரிலிருந்து விவசாய நிலப்பகுதிகள் வழியாக, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கின்றன. மழை போன்ற நேரங்களில், பழுதடைந்த மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின்தடை, மின் அழுத்த குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனால், மின் வினியோகம் பெறும் பகுதிகளில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன், அதனால் வீட்டு உபயோக மின் சாதன பொருட்களும் பழுதடைந்து வருகின்றன.
இதுகுறித்து, ஆலத்துார் மின் வாரியத்திற்கு தகவல் அளிக்கும்போது, இரவு நேரங்களில் விவசாய நிலப்பகுதிகளில் சென்று, மின் கம்பிகளை சரிசெய்வதில், ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
அதனால், இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டால், அப்போது சரிசெய்ய முடியாமல், பகலில் சென்று சரிசெய்யும் சூழல் உருவாகிறது.
எனவே, புதிய மின் கம்பம், மின் கம்பிகளை அமைக்க வேண்டும் எனவும், மின் பழுது ஏற்பட்டால் சரிசெய்யும் விதத்தில், மின் வழித்தடத்தை பிரதான சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும் எனவும் கூறி, ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று ஆலத்துார் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இளநிலை பொறியாளர் பாபுவிடம், கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவைப் பெற்ற இளநிலை பொறியாளர், 10 நாட்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.