ADDED : ஜூலை 30, 2025 11:14 PM
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, விஷ குளவிகள் கொட்டியதில், சிறுவன் உயிரிழந்தான்.
திருப்போரூர் அருகே செம்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில், நேற்று முன்தினம் மாலை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள காலிமனையில் பனை ஓலை ஒன்றில் இருந்த குளவி கூட்டில், பந்து பட்டுள்ளது.
கூட்டில் இருந்து பறந்த விஷ குளவிகள் சூழ்ந்து, அங்கிருந்த மூன்று சிறுவர்கள், ஒரு பெண் உட்பட நான்கு பேரை கொட்டியுள்ளன.ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.பின், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செம்பாக்கம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்த்தனேஷ், 7, என்ற சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவர், இதே பகுதியிலுள்ள பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.