/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர்வரத்து
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர்வரத்து
ADDED : ஜன 29, 2024 04:30 AM

குன்றத்துார் : வடகிழக்கு பருவமழையால், செம்பரம்பாக்கம் ஏரியில் 21 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், ஆந்திரா - தமிழகம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ், கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதனால், பூண்டி ஏரியின் நீர்மட்டத்தை குறைக்க, பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு, கடந்த 26ம் தேதி வினாடிக்கு 130 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 3.045 டி.எம்.சி.,யும், நீர்மட்டம் 21.72 அடியாக உள்ளது.
இதையடுத்து, சென்னை குடிநீர் தேவைக்கு 109 கன அடியும், சிப்காட் குடிநீர் தேவைக்கு 3 கன அடியும், விவசாய நீர் பாசனத்திற்கு 3 கன அடி என, 1,172 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக வனத்துறை சார்பில், ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், ஜனவரியில் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பும், மார்ச் மாதம் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் நீர்ப்பறவை கணக்கெடுக்கும் பணி, இரு தினங்களாக நடக்கிறது.
ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி, அமரம்பேடு ஏரி, மணிமங்கலம் ஏரி, மண்ணுார் ஏரி, ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன.
இதில், ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையில், கல்லுாரி மாணவர்கள், தனியார் அமைப்பினர் உள்ளிட்ட 30 பேர் ஈடுபட்டனர்.
நாமக்கோழி, நீர்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, உள்ளான், கொக்கு, சாம்பல் நரை, மீன்கொத்தி உள்ளிட்ட, 28 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.