/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து கேளம்பாக்கத்தில் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து கேளம்பாக்கத்தில் திருட்டு
ADDED : நவ 25, 2024 01:57 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தையூர் கிராமத்தில் வசிப்பவர் நாஞ்சில்குமார், 30. தனியார் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மனைவி தேவகிருபை, பிரசவத்திற்காக பெருங்களத்துாரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நாஞ்சில்குமார், நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டி விட்டு வெளியில் மின் விளக்கை எரிய வைத்துவிட்டு, தன் மனைவியை பார்க்க பெருங்களத்துாருக்கு சென்றார்.
நேற்று காலை 11:30 மணிக்கு, நாஞ்சில்குமார் வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள், துணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த, 8 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த டிவி, மூன்று மொபைல் போன்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, அவர் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில், உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டில் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு, 10 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.