/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் நடத்துநர்கள்...அலைக்கழிப்பு :வசைபாடுவதால் மன உளைச்சலில் பயணியர் தவிப்பு
/
நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் நடத்துநர்கள்...அலைக்கழிப்பு :வசைபாடுவதால் மன உளைச்சலில் பயணியர் தவிப்பு
நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் நடத்துநர்கள்...அலைக்கழிப்பு :வசைபாடுவதால் மன உளைச்சலில் பயணியர் தவிப்பு
நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் நடத்துநர்கள்...அலைக்கழிப்பு :வசைபாடுவதால் மன உளைச்சலில் பயணியர் தவிப்பு
UPDATED : மார் 29, 2025 01:39 AM
ADDED : மார் 28, 2025 08:52 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்துவதை தவிர்க்கும் ஓட்டுநர்களால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பயணியரை நடத்துநர்கள் வசைபாடுவதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் செல்வது தொடர்கதையாக உள்ளது. இதனால் முதியோர், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கேட்டால், அவர்கள் வசைபாடுவதால், பயணியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஏரிக்கரையின் மீது பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.
சென்னை, தாம்பரம் போன்ற பெரு நகரங்களுக்கு, பேருந்து மற்றும் ரயில்கள் வாயிலாக நாள்தோறும், 2,000க்கும் மேற்பட்டோர் இங்கிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.
பெரும்பாலும், இரவு நேரங்களில் பணி முடித்து, இரவு மற்றும் அதிகாலை மதுராந்தகம் வருகின்றனர்.
அப்போது பெருங்களத்துார், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுராந்தகம் பகுதிக்குச் செல்லும் பயணியரை, பேருந்தில் ஏற்றிச் செல்ல, நடத்துனர்கள் கறார் தெரிவிக்கின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் பணி முடித்து வீடு திரும்பும் பயணியர், மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் பேருந்துக்காக, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதே போல், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
கொளத்துார், தேன்பாக்கம், சூணாம்பேடு, பள்ளம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
காலை வேளைகளில் சென்னைக்கு பணிக்குச் செல்ல ஏராளமான பயணியர் காத்திருக்கும் நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள், வெண்ணாங்குப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை.
இதனால், உரிய நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படுவதால், பயணியர் செய்வதறியாது தவிக்கின்றனர்.
குறிப்பாக, பண்டிகை நாட்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலம் பகுதியில், இருபுறமும் அணுகுசாலைகள் உள்ளன. இங்கு, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.
இதில் பெரும்பாலான அரசு பேருந்துகள் மேம்பாலத்தின் மேல் செல்வதால், பயணியர் நீண்டநேரம் மேம்பாலத்தின் கீழ் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதேபோல், தென்மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகள், குறைவாகவே மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலையில் செல்கின்றன. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி, புறவழிச்சாலையிலிருந்து அரசு பேருந்துகள், செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்வதில்லை. இதனால், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆட்டோவிற்கு 200 ரூபாய் கட்டணம் கொடுத்து சென்று வருகின்றனர்.
எனவே, நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேருந்து பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
தரக்குறைவாக பேசும் நடத்துனர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுராந்தகம், அச்சிறுபாக்கம் பகுதிக்கு, பயணச்சீட்டு கேட்கும் பயணியரிடம், பேருந்துகளை அங்கெல்லாம் நிறுத்த முடியாது. பேருந்தில் ஏறி நீங்கள் துாங்க, நாங்கள் கண் முழிச்சு மதுராந்தகம், அச்சிறுபாக்கம் என கூப்பிட்டு இறக்கி விட வேண்டுமா? என, சக பயணியர் முன்னிலையில் நடத்துநர்கள் வசைபாடுகின்றனர்.
கிளாம்பாக்கத்தில் டிக்கெட் கொடுத்துவிட்டு, நடத்துனர்கள் உறங்கச் செல்கின்றனர்.
மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நேர காப்பகம் அமைத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் மதுராந்தகம் பகுதியில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் கண்காணிக்க வேண்டும்.
- ருத்ர பிரசாந்த்,
மதுராந்தகம்.
மாமல்லபுரத்தில், புறவழிப்பாதை சந்திப்பில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
வார இறுதி நாட்களில், புதுச்சேரி பேருந்துகள் கூட்ட நெரிசலுடன் செல்வதால்,
இங்கு நிற்காமலேயே வேகமாக செல்கின்றன.
பேருந்துகளிலிருந்து மாமல்லபுரம் பயணி இறங்க வேண்டியிருந்தால், சற்று தொலைவு கடந்து நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.
மாமல்லபுரத்தில், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை அமைந்துள்ள இடத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
செங்கல்பட்டு
- மாமல்லபுரம் இடையே இயங்கும், தடம் எண் 508 அரசு பேருந்துகள், தாம்பரம் -
மாமல்லபுரம் இடையே இயங்கும், தடம் எண் 515 மாநகர் பேருந்துகள் ஆகியவை,
இந்த நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும். மாநகர் பேருந்துகளை பொறுத்தவரை
காலை, மாலை, பெரும்பாலும் நிறுத்தாமலும் அல்லது நிறுத்தத்தை கடந்து
நின்றும் செல்கின்றன. இதனால், மாணவ - மாணவியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதுப்பட்டினம், வெங்கப்பாக்கம், கூவத்துார் ஆகிய இடங்களிலும், இந்நிலையே
உள்ளது.
* தாம்பரம் சானடோரியத்திலிருந்து வண்டலுார் மார்க்கமாக காஞ்சிபுரம், ஆரணி, வேலுார், சித்துார், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்ல 79, 279, 155, 166, 444 ஆகிய தடம் எண்களில் மொத்தம் 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் அனைத்தும் வண்டலுார் பேருந்து நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என, அரசு ஆணை உள்ளது. ஆனால், வண்டலுார் பேருந்து நிறுத்தத்தை சுற்றி, தனியார் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த போதிய இடம் இல்லாமல், பல நேரங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகின்றன.
தவிர, நடு சாலையில் பேருந்தை நிறுத்தினால், பின்னால் அடுத்தடுத்து வரக்கூடிய வாகனங்களுக்கு வழி இல்லாமல், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, விபத்தும் நடக்கிறது.
* வண்டலுார் ரயில் நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் தடம் எண் '18ஏ எக்ஸ், 91கே, 70எம்' ஆகிய அரசு பேருந்துகளில் சில நிற்காமல் செல்கின்றன.
இதுகுறித்து பேருந்து ஓட்டுனர்களிடம் கேட்ட போது, 'பேருந்தில் பயணிப்போரில், குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்குவோர் யாரும் இல்லை என்றாலோ, அதே பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணியர் யாரும் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டவில்லை என்றாலோ, பேருந்தை நிறுத்த அவசியமில்லை என உணர்ந்து, தொடர்ந்து ஓட்டிச் செல்கிறோம்' என்றனர்.
- நமது நிருபர் குழு -