/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 14, 2024 07:30 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை நடத்தும், பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பிரேம் சாந்தி அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, மாநில அளவில் போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில், மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன்பெறும் விவசாயிகளுக்கு, 5 லட்சம் ரூபாய், நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்பட உள்ளது.
போட்டியிடும் விவசாயி, குறைபந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். தனிநபர், தொடர்ந்து மூன்றாண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.
நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள், பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். பதிவு கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். போட்டிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு கட்டணம் 150 ரூபாய், சாகுபடி நில சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களை, வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம், வரும் மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்போர், ஏப்ரல் 15ம் தேதிக்குள் அறுவடை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.