ADDED : ஜூலை 27, 2025 12:22 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது.
சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், 37, என்பவர், நேற்று முன்தினம் இரவு மகேந்திரா தார் காரில், சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரிக்கரை பயணியர் நிழற்குடை அருகே சென்றபோது காரின் இன்ஜினில் இருந்து திடீரென புகை ஏற்பட்டுள்ளது.
புகை வருவதை அறிந்த ரங்கநாதன் கீழே இறங்கினார். தொடர்ந்து இன்ஜினில் இருந்து புகை அதிகமாக வந்து திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. மதுராந்தகம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு ரங்கநாதன் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், காரில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.